இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ) சார்பாக 1000 ஆக்சிஜன் சிலிண்டர்கள் தமிழக அரசிற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த சிலிண்டர்கள் தற்பொழுது 8 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், சிலிண்டருடன் மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்களை கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு தொடர்ச்சியாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. ஆக்சிஜன் சிலிண்டர்களை கொள்முதல் செய்ய ஏற்கனவே தமிழக முதல்வர் உத்தரவிட்டிருந்த நிலையில், சிப்காட் நிறுவனத்தின் மூலமாக பல்வேறு நாடுகளிலிருந்து ஏற்கனவே ஆக்சிஜன் சிலிண்டர்கள் இறக்குமதி செய்யப்பட்டு இருந்த நிலையில், இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ) நேரடியாக தாங்களே அந்த அமைப்பில் இருக்கக் கூடிய தொழில் நிறுவனங்களுடன் பேசி ஆயிரம் சிலிண்டர்கள் பல்வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்திருக்கிறார்கள்'.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிப்காட் நிறுவனம் மூலமாக நேரடியாக இறக்குமதி செய்யப்பட்ட 1,400 க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் சிலிண்டர்கள் 18 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று தமிழக முதல்வர் தலைமையில் எட்டு மாவட்டங்களுக்கு சி.ஐ.ஐ சார்பில் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட ஆயிரம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.