ஆத்தூர் தொகுதியில் கூட்டுறவுத்துறை சார்பாக அமைய உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான இடத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பார்வையிட்டனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் அறநிலையத்துறை சார்பாக திண்டுக்கல் ஒட்டன்சத்திரத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், ஆத்தூர் தொகுதியில் கூட்டுறவுத்துறை சார்பாக 100 கோடியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், கொடைக்கானல் மன்னவனூரில் கூட்டுறவுத்துறை சார்பாக தேசிய கூட்டுறவு ஆராய்ச்சி நிலையமும் அமைய உள்ளது. இந்நிலையில் ஆத்தூர் தொகுதியில் சீவல்சரகு ஊராட்சிக்கு உட்பட்ட சுதனாகியபுரம் அருகில் சுமார் 8 ஏக்கர் நிலப்பரப்பில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைவதற்கான உத்தரவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதற்கான இடத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார் கல்லூரி அமைய உள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்பின் பத்திரிகையாளர்களிடம் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும் போது, 'ஆத்தூர் தொகுதியில் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் அறிஞர் அண்ணா பொறியியல் கல்லூரியும், ஆத்தூர் ஒன்றியத்தில் இப்போது கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் கொண்டு வந்தது தி.மு. க. அரசு தான். அதுபோல் இப்பகுதியில் கல்லூரி அமைவதால் அடித்தட்டு மக்கள் குறிப்பாக ஏழை விவசாய மக்களின் பிள்ளைகள் பயனடைவார்கள்.பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த பொருளாளர் திலகபாமா, எங்கே கல்லூரி? எங்கே கல்லூரி? எனக் கேள்வி கேட்கிறார். திண்டுக்கல் மாவட்டத்திற்கு கல்லூரியை கொண்டு வந்தது தி.மு.க. அரசு. குறிப்பாக மறைந்த கலைஞர் முதல்வராக இருந்தபோது, திண்டுக்கல்லில் எம்.வி.எம் கல்லூரி, பழனியில் பழனியாண்டவர் கல்லூரி, நிலக்கோட்டை கலைக்கல்லூரி, ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் அறிஞர் அண்ணா பொறியியல் கல்லூரி, கொடைக்கானலில் அன்னை தெரசா பல்கலைக்கழகம் உட்பட கல்லூரிகள் மாணவர்கள் நலனில் அக்கறையோடு கொண்டு வந்தவர் கலைஞர் அவர்கள். அவர் வழியில் இன்று தமிழகத்தில் மக்கள் நலனுக்கான நல்லாட்சி செய்து வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வள்ளல் போல் செயல்பட்டு ஆட்சிக்கு வந்த 200 நாட்களுக்குள் 100 கோடி செலவில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் -2, தேசிய கூட்டுறவு ஆராய்ச்சி நிலையம் கொண்டு வந்துள்ளார். இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய கல்லூரியாக மன்னவனூரில் தேசிய ஆராய்ச்சி நிலையம் அமைய உள்ளது. இவை அனைத்தும் செய்தது தி.மு.க அரசு. இதையெல்லாம் தெரியாமல் பாமகவைச் சேர்ந்த திலகபாமா கல்லூரி எங்கே? என்று கேட்கிறார். இந்த கல்லூரிகள் போதுமா? இன்னும் வேண்டுமா?'' என்று கூறினார். இதில் மாவட்ட கூட்டுறவு துறையை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.