Skip to main content

ஒவ்வோர் குடும்பத்திற்கும் 10 ஆயிரம் வழங்கிடுக... முதல்வருக்கு முன்னாள் எம்.எல்.ஏ. வேண்டுகோள் 

Published on 17/04/2020 | Edited on 17/04/2020


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும் தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான முன்னாள் எம்.எல்.ஏ. நா. பெரியசாமி வியாழக்கிழமை முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பிய மின் அஞ்சலில் கீழ்கன்டவாறு கூறியுள்ளார். 
 

"கடந்த மார்ச் மாதம் தொடங்கி புதுவகை கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவி வருவதால் இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்டுள்ளது. பொது சுகாதாரத்தில் ஏற்பட்டுள்ள இயற்கை பேரிடரை எதிர்கொள்ள தங்கள் சீரிய தலைமையிலான அரசு தடுப்பு நடவடிக்கைகளை முனைப்பாக மேற்கொண்டு வருவது மன நிறைவளிக்கிறது. 
 

 

rupees


 

தடுப்பு நடவடிக்கைகளை மீறி கோவிட் 19 நோய்த் தொற்று பரவல் தொடர்வது ஒரு சவாலாகியுள்ளது. இந்த 'ஆட்கொல்லி' நோய்த் தொற்று பரவலின்  சங்கிலித் தொடரில் முறிவு ஏற்படுத்துவது உடனடித் தேவையானது. இதன் காரணமாகச் சமூக இடைவெளிக் கடைப்பிடித்தல், விலகி இருத்தல், தனிமைப் படுத்துதல் ஆகியவை முக்கியத் தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டது. 
 

இத்துடன் வீட்டில் இருப்பது, முகக்கவசம் அணிவது, கைதுடைப்பான் (Sanitizer) கிருமி நாசினி போட்டுக் கொள்வது, அடிக்கடி சோப்புப் போட்டு கை, கால்களை கழுவிக் கொள்வது போன்ற முன்னெச்சரிக்கை அறிவுரைகள் வழங்கப் படுகின்றன. 
 

http://onelink.to/nknapp

 

இந்தச் சூழலில் மத்திய அரசின் மாண்புமிகு பிரதமர் கடந்த 19.03.2020 ஆம் தேதியில், 22.03.2020 ஆம் தேதி ஒரு நாள் நாடு முழுவதும் மக்கள் சுய ஊரடங்கு நடவடிக்கையை அறிவித்தார். இது வெற்றிகரமாக நிறைவேறியது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு குற்றவியல் சட்டம் பிரிவு 144-ன் படி தடையுத்தரவும், தொற்று நோய்கள் சட்டம் 1897, பிரிவு 2-ன் படி மாவட்ட எல்லைகள் மூடப்படவும் உத்தரவும் பிறப்பித்தது. 
 

இந்தக் கடுமையான கட்டுபாடுகளால் தொடரும் நிலையிலும் கோவிட் 19 வைரஸ் தொற்று நோய்ப் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால் 24.03.2020 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் (Lock down ) முடக்கப்பட்டுள்ளது. இந்த நாடு முடக்கக் காலம் வருகிற மே 3-ம் தேதி வரை நீடிக்கும் எனப் பிரதமர் அறிவித்துள்ளார். 

 

ffff


 

புதுவகை கரானா வைரஸ் தொற்று நோய்ப் பரவல் தடுப்புக்காக மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் முழு மனத்துடன் ஆதரித்து, ஒத்துழைத்து வருகிறது. 
 

இந்தக் கடுமையான நடவடிக்கை காலத்தில் விவசாயத் தொழிலாளர்கள், கிராமத் தொழிலாளர்கள், அமைப்புசாரத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைகுலைந்து வருவதை அரசு கருத்தில் கொண்டிருக்கும் என நம்புகிறோம்.

தமிழ்நாடு அரசு முதல் கட்டமாக அறிவித்த கோவிட்-19 வைரஸ் தொற்று நோய் தடுப்பு கால நிவாரண உதவிகள் குறிப்பாகக் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூபாய் ஆயிரம், ஏப்ரல் மாத உணவுப் பொருள்கள் விலையில்லாமல் வழங்கியது போன்றவைகள் 'உயிர் தண்ணீர் ஊற்றி' காப்பாற்றியதாக அமைந்தது என்பதை நன்றியோடு பாராட்டுகிறோம்.
 

இந்த உயிர்க் காக்கும் நிவாரண உதவிகள் குடும்ப அட்டை கிடைக்காத குடும்பங்கள் பெற முடியாத துயரம் நீடித்து வருகின்றது. அரசின் வேண்டுகோளை ஏற்று அரிசி வேண்டாம் என்று ஒப்புதல் அளித்து 'சர்க்கரை' பெறும் குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொண்ட குடும்பங்களுக்கு நிவாரணம் கிடைக்காத அவல நிலை ஏற்பட்டுள்ளது. 
 

அதே சமயம் ஊரடங்கு காலம் நீடிப்பதால், முன்பை விட கடுமையான கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து வர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊரகப் பகுதிகளில் உடல் உழைப்பு மட்டுமே வாழ்வாதாரம் என்ற நிலையில் வாழ்ந்து வரும் விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பிற தொழிலாளர்களுக்கு அரசின் ஆதரவுக் கரம் தவிர வேறு எந்த வழிவகையும் இல்லை என்பதைத் தங்கள் கவனத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறோம். 
 

சமூக ரீதியாக பட்டியலின, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகப் பிரிவுகளில் உள்ள விவசாயத் தொழிலாளர்களுக்கும், கிராமத் தொழிலாளர்களுக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை அட்டை பெற்றுள்ள குடும்பங்கள் அனைத்துக்கும் தலா ரூபாய் 10,000 கோவிட்-19 பேரிடர் கால நிவாரண நிதியாக வழங்க வேண்டும். 
 

 

http://onelink.to/nknapp

 

இத்துடன் நியாய விலைக் கடைகளில் ஏப்ரல் மாதம் வழங்கப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்களை மே, ஜூன் மாதங்களுக்கும் நீடித்து வழங்க வேண்டும். ரூபாய் 500 விலையில் விற்பனை செய்யும் பொருள்கள் தொகுப்பை விலையில்லாமல் வழங்க வேண்டும். 
 

கிராமப்புறத் தொழிலாளர்கள் அனைவருக்கும் இலவச மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும். முகக்கவசம், கையுறைகள், கைதுடைப்பான் போன்ற இன்றியமையா  தொற்று நோய் தடுப்பு கருவிகள் நியாய விலைக் கடைகள் மூலம் விலையில்லாமல் வழங்க வேண்டும். 
 

முதியோர், விதவையர், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கு வழங்கி வரும் மாத ஓய்வூதியம் இரட்டிப்பாக உயர்த்தி வழங்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகள் மீது மாண்புமிகு முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு, உரிய உத்தரவுகள் வழங்கி, அவைகளை முழுமையாக நிறைவேற்றித் தருமாறு தமிழ்நாடு மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்" எனக் கூறியுள்ளார். 


 

சார்ந்த செய்திகள்