கேரளாவில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் கேரளாவில் ஷவர்மாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஷவர்மா போன்ற உணவுகள் தயாரிக்கப்படும் இடங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரியில் படித்துவரும் மாணவர்கள் சிலர் ஷவர்மா சாப்பிட்டு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. தொடர்ச்சியாக ஷவர்மா, பிரியாணி சாப்பிட்டவர்கள் உடல்நலம் பாதிக்கப்படுவது தொடர்பாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில் 10 ஷவர்மா கடைகளுக்கு 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் 60 க்கும் மேற்பட்ட கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ஜெகதீஸ் சந்திரபோஸ் தலைமையில் அதிகாரிகள் கடைகளில் வெட்டப்பட்ட சிக்கன் 3 மணிநேரத்திற்குள் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்ட நிலையில் திருவள்ளூர், அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்த 10 கடைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு 2,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் அந்த கடைகளில் இருந்து 25 கிலோ கெட்டுப்போன சிக்கன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.