Skip to main content

பஞ்சாயத்தில் 2.5 லட்சம் அபராதம்! நாட்டாமைகளுக்கு ஆதரவாக போலிஸ் அதிகாரிகள் பஞ்சாயத்து!

Published on 20/11/2020 | Edited on 20/11/2020
ddd

 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 26 வயதான கனகராஜ் என்கின்ற கனகு. இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த குமரேசன் என்பவரின் மகள் 23 வயதான ஜெயபிரியாவை காதலித்து வந்துள்ளார். 2018 ஆம் ஆண்டு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 

 

ஊரை மதிக்காமல் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறி ஊர் பஞ்சாயத்தினர் மாப்பிள்ளை வீட்டாருக்கு ரூபாய் 1.5  லட்சமும், பெண் வீட்டாருக்கு ரூபாய் 1 லட்சம் அபராதம் விதித்துள்ளனர். அபராத தொகையை கட்ட முடியவில்லை, பணம் கட்டாததால் பஞ்சாயத்து நாட்டாமைகள் பிரச்சனை செய்துள்ளனர். 

 

ஊரில் உள்ள பிரச்சனைகள் தாங்க முடியாமல் காதல் மனைவியுடன் பிழைப்பு தேடி சென்னைக்கு சென்றுள்ளார் கனகராஜ். கடந்த ஒன்றை ஆண்டுகளாக சென்னையில் ஓட்டுனராக வேலை செய்த வந்துள்ளார். அங்கு இவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது. குடும்ப உறவுகளின் நல்லது கெட்டதுக்கு எதுக்கும் வரமுடியாமல் சென்னையிலேயே இருந்துள்ளனர். 

 

ddd

 

கடந்த மார்ச் மாதம் கரோனா பரவலால் ஊரடங்கு அமல்படுத்தியது அரசாங்கம். இதனால் வேலை இழந்த கனகராஜ் குடும்பத்துடன் சொந்த ஊர் திரும்பி உள்ளார். கனகராஜ் தனது மனைவி, பிள்ளையுடன் ஊருக்கு வந்திருப்பதை அறிந்து ஊர் நாட்டாமைகள் எல்லப்பன் மற்றும் நாகேஷ் ஆகியோர் காதல் திருமணம் செய்து கொண்டதற்காக இரண்டு ஆண்டுக்கு முன்பு அபராதம் விதித்துயிருப்பதை கூறி தம்பதி இருவரும், அபராதம் தொகையை கட்டச்சொல்லி மிரட்டியுள்ளனர். பணம் கட்டினால் தான் ஊரில் வாழவிடுவோம் என்று கூறியுள்ளனர்.

 

இதனை தொடர்ந்து பெண்ணின் தந்தை குமரேசன் ஊர் நாட்டான்மைகளிடம் ரூபாய் 10 ஆயிரம் அபராத தொகை செலுத்திவிட்டு மீதி பணத்தை பிறகு கடுவதாக சொன்னதாக கூறப்படுகிறது. பெண்ணின் தந்தை குமரேசன் தேங்காய் உரிக்கும் தொழில் செய்து வருகிறார். அபராத தொகை முழுமையாக கட்டாததால் வேலை தரும் முதலாளியிடம், அபராதம் முழுமையாக கட்டும் வரை வேலை வழங்கக்கூடாது என்று ஊர் சார்பில் உத்தரவிட்டுள்ளனர். கனகராஜ் குடும்பம் அபராதம் தொகை கட்ட முடியாத நிலையில் இருந்துள்ளனர். இதனால் அவர் குடும்பம் மிரட்டப்பட்டுள்ளது. இதனால் விரக்தியான கனகராஜ் நவம்பர் 10ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜய்குமாரிடம் புகார் மனு கொடுத்துள்ளார். 

 

இந்த மனு துத்திப்பட்டு காவல் நிலையத்துக்கு அனுப்ப அங்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இந்நிலையில் நவம்பர் 18 ந்தேதி வாணியம்பாடி சரக காவல் உட்கோட்டம் சார்பில் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள புகார் மனுக்கள் மீது தீர்வுக்கான முகாம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இங்கு கனகராஜ் தந்த புகார் மனு விசாரிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இரு தரப்பையும் விசாரணைக்கு அழைத்தனர். 

 

ddd

 

காதல் திருமணம் செய்த ஜோடிக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களும், ஊர் நாட்டாமைகளுக்கு ஆதரவாக அதிமுகவினர் என சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் முகாம் நடைபெறும் மண்டபத்திற்கு வருகை தந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது, கூச்சல் வாய் சண்டை அதிகமானது. இதனால் சமந்தப்பட்டோர் தவிர மற்றவர்களை அங்கிருந்து துரத்தியது போலிஸ்.

 

இதனை தொடர்ந்து காதல் திருமணம் செய்துகொண்ட கனகராஜ், ஜெயபிரியா தம்பதியர்க்கும், அவர்களது இரு குடும்பத்தினர்களுக்கு ஊர் சார்பில் எந்த நிபந்தனைகளுக்கு விதிக்கக்கூடாது, தொந்தரவு தரக்கூடாது என்று ஊர் நாட்டாமைகளை எச்சரித்தும், இருதரப்பையும் சமாதானம் செய்து போலீசார் அனுப்பி வைத்தனர்.

 

ஊர் நாட்டாமைகள் ஆளும்கட்சி என்பதால், சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல், அதிகாரிகள் இருதரப்புக்கும் பஞ்சாயத்து செய்து நாட்டாமைகள் செய்த தப்புக்கு துணை போய் உள்ளார்கள் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்