சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை முடிந்து வெளியே வந்துள்ள சசிகலா, தீவிர அரசியலில் ஈடுபட பல்வேறு முயற்சிகள் எடுத்துவருகிறார். தன்னை அதிமுக பொதுச்செயலாளராக தொடர்ந்து அவர் அடையாளப்படுத்தி வந்தாலும், அவரை மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மறுப்பு தெரிவித்துவருகின்றனர். அதே நேரத்தில் சசிகலாவை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொண்டு ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்ற குரலும் அதிமுக வட்டாரத்தில் ஒலிக்கிறது.
கடந்த 25ஆம் தேதி மதுரையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்திடம் சசிகலா மீண்டும் கட்சியில் சேர்க்கப்படுவாரா எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த ஓ. பன்னீர்செல்வம், “சசிகலாவை மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவெடுப்பார்கள்” எனத் தெரிவித்தார். இந்தப் பேட்டியின்போது முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் இருந்தனர்.
இந்நிலையில் இன்று (28.10.2021) செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, செய்தியாளர்களிடம் பல்வேறு கேள்விக்குப் பதிலளித்தார். அப்போது, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். தெரிவித்த கருத்து குறித்தான கேள்விக்குப் பதில் அளித்த அவர், “அதிமுக ஒருங்கிணைப்பாளர் (ஓ. பன்னீர்செல்வம்) சொன்னதன் பிறகு, இணை ஒருங்கிணைப்பாளர் (எடப்பாடி பழனிசாமி) இதைப் பற்றி பேசவே இல்லை. அவர், அவரின் கருத்தைப் பதிவு செய்வார். ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்திருக்கிறது. நகர்ப்புறத் தேர்தல் வரவிருக்கிறது. இப்படியான சூழ்நிலையில் அதிமுகவை எப்படி வழிநடத்துவது, என்ன செய்வது என்பதை தலைமை கழக நிர்வாகிகள் கூடி முடிவெடுப்போம் என்று தெரிவித்திருக்கிறார். அவர் சொன்னதில் என்ன தவறு” என்று தெரிவித்தார்.