தமிழகத்தில் இருந்து வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்ற எம்பிக்கள் செயற்கையான தமிழ் பற்றை வெளிப்படுத்தி உள்ளார்கள். தமிழில் உறுதி மொழி எடுத்துவிட்டு பலர் ஆங்கிலத்தில் கையெழுத்துப் போட்டு உள்ளார்கள். இயல்பாக அவரவர் தாய்மொழியில் உறுதிமொழி எடுப்பது பாராட்டுக்குறியது. இவர்கள் படித்தது ஆங்கிலம், பள்ளி எது என்பதையெல்லாம் பார்த்தோம் என்றால் இவர்கள் எப்படிப்பட்ட போலி தமிழ் பற்றை முன்னிறுத்துக்கொண்டிருக்கிறார்கள் என தெரியும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் கூறியுள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி, தமிழிசைக்கு எது முரண், எது முரணில்லை என்பது தெரியாது. நான் அப்படி சொல்வதால் அவர் வருத்தமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஒரு கையெழுத்து என்பது ஒருவர் போட்டு பழகிவிட்ட பிறகு பல ஆவணங்களில் அது இருக்கிறது. அதன் பிறகு அந்த கையெழுத்தை மாற்றக்கூடாது. மாற்றினீர்கள் என்றால் எந்த ஆவணமும் செல்லாமல் ஆகிவிடும். எனவே அவர்கள் படிக்கிற காலத்தில் அப்படி கையெழுத்து போட்டியிருப்பார்கள். அது எந்த மொழி என்று கூட சொல்ல முடியாது. கையெழுத்துக்கு ஏது மொழி. அதில் தமிழ் வார்த்தையையோ, ஆங்கில வார்த்தையையோ கண்டு பிடிக்க முடியாது. சில கோடுகளைத்தான் கண்டுபிடிக்க முடியும். கையெழுத்துக்கு மொழி கிடையாது என்றார்.