![admk](http://image.nakkheeran.in/cdn/farfuture/2J546n3pjfZ-qdQeeFbke_r-sVoyG-NKgchUoctZL0c/1674304969/sites/default/files/inline-images/n223038.jpg)
ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈ.வெ.ரா ஜனவரி 4ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். அதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு இத்தொகுதியை மீண்டும் ஒதுக்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், திமுக தேர்தல் பணியைத் தொடங்கிவிட்டது.
இடைத்தேர்தலில் ஆதரவு கோரி பாஜகவின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையை எடப்பாடி பழனிசாமி சார்பில் அதிமுகவின் மூத்த தலைவர்கள் சந்தித்த நிலையில், தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு நேரில் சென்ற ஓ.பன்னீர்செல்வம் பாஜக தலைவர் அண்ணாமலையுடன் ஆலோசித்தார். இந்த சந்திப்பிற்கு வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் உடன் சென்றிருந்தனர். இபிஎஸ் தரப்பு பாஜகவிடம் ஆதரவைக் கோரியிருக்கும் நிலையில், ஓபிஎஸ் கமலாலயத்திற்கே சென்று அண்ணாமலையைச் சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![admk](http://image.nakkheeran.in/cdn/farfuture/7qm4Ep6dx2wEQEBeywmYbJ7TXD-IT1aQiDY_uyjrqNQ/1674304994/sites/default/files/inline-images/n223039.jpg)
இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், ''காலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் குறித்து விரிவாக என்னுடைய பேட்டியை அளித்திருந்தேன். அதில் பல கேள்விகளை நீங்கள் கேட்டீர்கள். அதற்குரிய பதில்களை நான் தந்திருக்கிறேன். புதிதாக ஏதாவது கேட்பதாக இருந்தால் கேளுங்கள். பதில் சொல்கிறேன். நாங்கள் இன்று பாஜகவினுடைய தலைமை அலுவலகத்திற்கு வந்து பாஜக மாநிலத் தலைவரையும் பாஜகவின் முன்னணி தலைவர்களையும் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தோம். எங்களுடைய சந்திப்பு மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்தது.
மாநில நலன் பற்றியும் தேசிய நலன் பற்றியும் விரிவாக மனம் விட்டுப் பேசியிருந்தோம். ஏற்கனவே காலையில் அதிமுக ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் நாங்கள் போட்டியிடுகிறோம் என்று சொன்னேன். ஒரு நிருபர் பாஜக போட்டியிட்டால் உங்களுடைய நிலை என்ன என்று கேட்டார். தேசிய நலன் கருதி பாஜக ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டால் உறுதியாக எங்களது தார்மீக ஆதரவை நாங்கள் அளிப்போம் என்று பதில் சொல்லி இருக்கிறோம். அந்த நிலைதான் இப்போது உள்ளது'' என்றார்.
அப்பொழுது செய்தியாளர் ஒருவர், “எடப்பாடி பழனிசாமி வேட்பாளரை அறிவித்தால் ஆதரிக்கத் தயாராக உள்ளீர்களா?” எனக் கேள்வியெழுப்ப, பதிலளிக்காமல் ஓ.பன்னீர்செல்வம் அங்கிருந்து கிளம்பினார்.