அதிமுகவின் மூத்த உறுப்பினரான பண்ருட்டி ராமச்சந்திரனை பன்னீர்செல்வம் மற்றும் அவரது தரப்பினர் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ் பேசுகையில், ''அதிமுகவின் மூத்த முன்னோடி, எம்ஜிஆர் காலத்திலும், ஜெயலலிதா காலத்திலும் இயக்கத்திற்காக அரும்பாடுபட்டவர் என்ற அடிப்படையில் மரியாதை நிமித்தமாக பண்ருட்டி ராமச்சந்திரனை நாங்கள் சந்தித்தோம். நாங்கள் முழுமையாக நம்புவது அதிமுகவின் அடிப்படை தொண்டர்களையே. அடிப்படைத் தொண்டர்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்களோ, இந்த இயக்கம் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்களோ அந்த வழியில்தான் எங்களுடைய அரசியல் பயணம் இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களைப் பொறுத்தவரை எங்களுடைய சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பாக தான் கருதுகிறேன். எம்ஜிஆர் உருவாக்கிய இந்த இயக்கம் அனைவரும் ஒன்றுபட்டு இயங்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய இதயப்பூர்வமான ஏற்பாடு. பொறுத்திருந்து பாருங்கள் எல்லாம் நன்மையாக முடியும். உங்களிடம் சொல்லிவிட்டு தான் செல்வோம்'' என்றார்.