தமிழக ஆளுநர் 10க்கும் மேற்பட்ட மசோதாக்களைத் திருப்பி அனுப்பியிருந்த நிலையில், இன்று சட்டப்பேரவை கூடியது. இன்று கூடிய சிறப்புச் சட்டப்பேரவை கூட்டத்தில் தனி தீர்மானத்தை முன்மொழிந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.
அவரது உரையில், “தமிழக ஆளுநர், தமிழக அரசால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை திருப்பி அனுப்பி வைத்துள்ளது. தமிழ்நாட்டு மக்களையும் இந்த சட்டமன்றத்தையும் ஆளுநர் அவமதிக்கிறார் என்றுதான் பொருள். 10க்கும் மேற்பட்ட மசோதாக்களின் கோப்புகளுக்கு அவர் ஒப்புதல் வழங்காமல் இருப்பது சட்ட விரோதமாகும்; அனைத்துக்கும் மேலாக இந்த சட்டமன்றத்தின் இறையாண்மைக்கு எதிரானதாகும். அரசியல் சாசன சட்டப்பிரிவு 200இன் கீழ்படி மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு, அதை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் போது அதற்கு ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும்'' என்றார். இதையடுத்து அவர், ஆளுநர் அனுப்பிய மசோதாக்கள் தொடர்பாக சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். அதன் பிறகு, இந்த தீர்மான ஒருமனதாக நிறைவேறியது.
இதற்கு முன்னதாக இந்த தீர்மானம் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய வானதி சீனிவாசன், “தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பல்வேறு முக்கிய பிரச்சனைகளில் இருந்து திசை திருப்புவதற்காக தான் இது போல் செய்கிறார்கள். ஆளுநருக்கு என்ன அதிகாரம் இருக்கிறதோ அதுபடி தான் அவர் செயல்படுகிறார். ஒருவேளை அவர் நியமித்த அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் இருந்தால் அதை உதாரணம் காட்டி நீங்கள் சொல்லலாம். மேலும், ஆளுநரையே குற்றம் சாட்டி வருகிறார்கள். ஆளுநர் வெளியே வரக்கூடாதா? அவர் ராஜ்பவனை விட்டு வெளியே வரக்கூடாது என்று நினைக்கிறார்களா?. இவர்கள் வேறு ஏதோ காரணத்திற்காக ஆளுநரை எதிர்க்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், அவருக்கு எதிராக இந்த மசோதாக்கள் மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றியிருக்கிறார்கள்” என்று கூறினார்.