தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் எந்த நேரத்திலும் அறிவிக்க வாய்ப்பு உண்டு என்று கூறுகின்றனர். இதனால் ஆளுங்கட்சியான அதிமுக சார்பாக, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சி உறுப்பினர்கள் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது. தற்போது, எதிர்க்கட்சியான திமுக.,வும் தங்களது தொண்டர்களுக்கு விருப்ப மனு தாக்கல் செய்ய அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக, திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுக.,வினர் வரும் 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை, கழக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு நேரில் வந்து, விருப்ப மனுவை தாக்கல் செய்யலாம் என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து திமுக மற்றும் அதிமுகவில் இருக்கும் கூட்டணி கட்சிகள் மேயர் பதவி கேட்டு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் சென்னை மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விருப்ப மனு தாக்கல் செய்து வருகின்றனர். இதனால் உதயநிதி ஸ்டாலினுக்கு சென்னை மேயர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படும் என்று அக்கட்சி வட்டாரங்கள் கூறிவருகின்றனர். இது பற்றி விசாரித்த போது, உதயநிதி சென்னை மேயர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பில் இளைஞர் அணியினர் தற்போது இருந்தே உற்சகமாக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டனர்.
மேலும் ஸ்டாலின் சென்னை மேயராக இருந்த காலத்தில் தான் அதிக பாலங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளை அகலப்படுத்தும் பணிகள் அதிகமாக நடைபெற்றது. அதோடு மேயர் பதவி மூலம் மக்களிடையே ஸ்டாலின் அதிக தொடர்பை ஏற்படுத்தி கொண்டார். அதே போல் உதயநிதி ஸ்டாலினுக்கும் மேயர் பதவி கொடுப்பதன் மூலம் மக்களோடு அதிக தொடர்பை ஏற்படுத்த வாய்ப்பு உருவாகும் என்று கூறிவருகின்றனர். கடந்த சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் சென்னை திமுகவின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. எனவே சென்னையில் போட்டியிடுவது உதயநிதிக்கு எளிதாக வெற்றியை தேடித்தரும் என்று அக்கட்சியினர் நம்புகின்றனர்.