தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகளையும், இடைத்தேர்தல் நடைபெற்ற கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளையும் எண்ணும் பணி இன்று (02/05/2021) காலை 08.00 மணிக்குத் தொடங்கியது. தமிழகத்தில் மொத்தம் அமைக்கப்பட்டுள்ள 75 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகளும் பின்னர் வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன. மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி 158 சட்டமன்றத் தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 76 சட்டமன்றத் தொகுதிகளிலும் முன்னனியில் உள்ளது.
திருச்சி மாவட்டம், முசிறி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ந.தியாகராஜன் 90,624 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் M.செல்வராசு 63,788 வாக்குகளும் பெற்ற நிலையில், திமுக வேட்பாளர் தியாகராஜன் 26,836 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனால் முசிறி தொகுதியை திமுக 10 வருடத்திற்கு பிறகு கைப்பற்றியது.
அதேபோல் திருச்சி மாவட்டம், துறையூரில் திமுக வேட்பாளர் ஸ்டாலின்குமார் வெற்றி பெற்றுள்ளார். திருச்சி துறையூரில் 23 சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றதில் திமுக ஸ்டாலின்குமார் 87,786 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் இந்திராகாந்தி 65,715 வாக்குகள் பெற்ற நிலையில், ஸ்டாலின் குமார் 22, 071 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.