ஓபிஎஸ் தரப்பிலிருந்து அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். 88 மாவட்டச் செயலாளர்கள் தலைமைக் கழக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஓ.பன்னீர்செல்வம் “நாங்கள் இன்று தொண்டர்களை ஒழுங்குபடுத்துகின்ற இணைக்கின்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். அதில் நாங்கள் வெற்றி அடைந்துள்ளோம். நடாளுமன்றத் தேர்தல் குறித்து முடிவெடுக்க இன்னும் தக்க சூழல் உருவாகவில்லை.
வரவு செலவுக்கணக்கை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதாகச் சொல்லுகிறீர்கள். அது நான் பொருளாளராக இருந்தபோது சமர்ப்பிக்கப்பட்ட கணக்குகள், உலகத்திலேயே ஒற்றுமையாக இணையக்கூடாது எனச் சொல்லும் ஒரு பிறவி இருக்கிறதென்றால் அது பழனிசாமிதான். தேர்தல் ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்பின் படி சின்னமும் கட்சியும் எங்களுக்குத்தான் அமையும்.
பொதுக்குழு முறையாக நடைபெறும். அதற்குரிய அறிவிப்பு முறையாக வெளிவரும். திமுக செய்யும் தவறுகளை முறையாகச் சுட்டிக்காட்டும் இயக்கம் அதிமுகதான். அதை நான் முறையாகச் செய்து கொண்டிருக்கிறேன். கட்சி நிதி அவர்களால் கையாடல் செய்யப்பட்டதா, முறைகேடு எனத் தகவல் வந்ததா எனக் கேட்கின்றனர். அதுல ஒரு சஸ்பென்ஸ் இருக்கு. கொஞ்சம் பொறுமையா இருங்க” எனக் கூறினார்.