பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினர் பெரியாருக்கு மரியாதை செலுத்தினர். அவரின் பேச்சுகளும், கொள்கைகளும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதற்கிடையே, பெரியாரின் நினைவு தினத்தை அடுத்து தமிழக பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு ட்வீட் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த ட்வீட்டுக்கு தி.மு.க. உள்பட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து பா.ஜ.க. அந்த ட்வீட்டை நீக்கியது.
கோயம்பத்தூரில் பெரியாரையும், மணியம்மையாரையும் இழிவுபடுத்தி பேசியவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோவையில் உள்ள பாஜக அலுவலகத்தை, கோவையில் உள்ள அனைத்துக் கட்சியினர் சார்பாக முற்றுகையிடும் போராட்டம் நடந்தது.
தந்தை பெரியார் திராவிடர் கழகம் பொதுச் செயலாளர் கு.இராமராமகிருஷ்ணன், திராவிட தமிழர் கட்சி தலைவர் வெண்மணி, தமிழர் விடியல் கட்சி ஒருங்கிணைப்பாளர் நவீன், திராவிடர் விடுதலைக் கழகம் மாவட்ட செயலாளர் நேரு தாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் சு.சி கலையரசன். மே 17 இயக்கம் ஜெகன். திராவிடத் தமிழர் கட்சி பொறியாளர் செந்தில் மற்றும் பல்வேறு கட்சியினர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பிரதமர் மோடியை கைது செய்ய வேண்டும் என்று கையில் பதாகை வைத்து முழக்கமிட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து திருமண மண்டபம் ஒன்றில் அடைத்து வைத்தனர்.