தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தனது கட்சியின் பெயரான தெலங்கானா ராஷ்டிர சமிதி என்பதை பாரத் ராஷ்டிர சமிதி எனப் பெயர்மாற்றம் செய்துள்ளார்.
இந்தப் பெயர்மாற்றத்திற்கு பிறகு பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் பொதுக்கூட்டம் தெலங்கானாவின் கம்மம் பகுதியில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், கேரள முதல்வர் பினராயி விஜயன், பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய சந்திரசேகர ராவ், “நாட்டில் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சனைகளான மாநிலங்களுக்கு இடையே இருக்கும் நதிநீர்ப் பங்கீடு பிரச்சனைகள், பணமதிப்பிழப்பு, வேலைவாய்ப்பு, தனியார்மயமாக்கல் ஆகியவற்றிற்கு தீர்வு காண்பதே பாரத் ராஷ்டிர சமிதியின் முக்கிய நோக்கம்” எனக் கூறினார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “நாட்டின் வளர்ச்சிக்கு முதலமைச்சர்கள் 24 மணிநேரமும் பாடுபட்டு வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அரசுகளுக்கு நெருக்கடிகளை அளிப்பது குறித்தே மோடி சிந்திக்கிறார். டெல்லிக்கு டெல்லி ஆளுநர்; பஞ்சாபிற்கு பஞ்சாப் ஆளுநர்; தெலங்கானாவிற்கு தெலங்கானா ஆளுநர் எனத் தொடர்ந்து ஆளுநர்களால் நெருக்கடி கொடுக்கப்படுகிறது. இது ஆளுநர்கள் கொடுக்கும் நெருக்கடி அல்ல. மோடி கொடுக்கும் நெருக்கடி. தற்போது நாடு மாற்றத்தை விரும்புகிறது. வருகிற 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் மக்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு. இன்னும் எத்தனை நாள் காத்திருக்கப் போகிறீர்கள்” எனக் கூறினார்.