நாகை முதல் திருவாரூர் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை (NHAl) மழையால் பாதிக்கப்பட்டு கடந்த 3 மாதங்களாக பல விபத்துகளைச் சந்தித்து வருகிறது எனக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டார் நாகை எம்எல்ஏவும் மஜக பொதுச் செயலாளருமான மு.தமிமுன் அன்சாரி
பலமுறை NHAl அதிகாரிகளிடம் பேசியும் நடவடிக்கை இல்லை. நாகை ரயிலடி முதல் ஆழியூர்வரை உள்ள சாலை மிக மோசமாக உள்ளதாக பொதுமக்கள், வாகன ஒட்டிகள் முறையிட்டனர். கோட்டை வாசல்படி EB துணை மின் நிலையம் அருகே அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு பலர் காயமடைந்து வருகின்றனர். இதனால் இக்கோரிக்கையை முன்வைத்து இன்று தேசிய நெடுஞ்சாலையில், சிக்கல் கடை வீதியில் அப்பகுதி மக்களுடன் சேர்ந்து அவர் சாலை மறியலில் ஈடுபட்டார் என மஜகவினர் தெரிவித்தனர்.
மறியலின்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இப்போது டெண்டர் விடப்பட்டுவிட்டது என்றும், விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்றும் கூறுகிறார்கள். அவர்கள் அதைச் செய்யாவிட்டால் அடுத்தடுத்து மறியல் நடைபெறும் என்றார். பிறகு மறியலில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.