விழுப்புரம் அருகே பத்தாம் வகுப்பு மாணவி உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொடியவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில், ''விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூரை அடுத்த சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ முன்பகை காரணமாகப் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியளிக்கிறது. இது கொடூரமான செயல். ஜெயஸ்ரீயை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆயிரம் முன்பகை இருந்தாலும் மனிதமும், இதயமும் உள்ளவர்களால் வாழ வேண்டிய சிறுமியை உயிருடன் எரிக்கும் குரூரத்தை அரங்கேற்ற முடியாது. இதற்குக் காரணமானவர்களுக்கு விரைந்து தண்டனை வழங்கப்பட வேண்டும். அது இத்தகைய கொடியவர்களுக்குப் பாடமாக அமைய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.