கரோனாவால் நாடு முழுவதும் அடிதட்டு மக்களும், நடுத்தர மக்களும் பெருமளில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் இயல்பு வாழ்க்கை திரும்பவே இன்னும் சில மாதங்கள் ஆகும் என்ற நிலை தொடர்கிறது. ஊரடங்கு காலத்தில் தி.மு.க. மற்றும் பல தன்னார்வ அமைப்புகள், பொருளாதார வசதியில்லாத ஏழைமக்கள், கூலித் தொழிலாளர்கள் என பலதரப்பினர்களுக்கும் உயிர் வாழ அத்தியாவசியத் தேவைக்காக உணவிற்காக, அரிசி, காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களை வழங்கியது. கடந்த 65 நாட்களாகச் செய்தவர்கள், ஊரடங்கில் பல தளர்வுகள் செய்யப்பட்டதும் உதவிகள் செய்வதைப் படிப்படியாகக் குறைத்துக்கொண்டனர்.
ஊரடங்கு பெருமளவில் விலக்கப்பட்டாலும் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்றவற்றால் அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்கள் வருமானமின்றி வாங்கும் சக்தியின் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைக் கவனத்தில் கொண்டு ரஜினி மக்கள் மன்றம் களத்தில் இறங்கியுள்ளது.
கரோனா பாதிப்பிலிருந்து மீள இயல்பு நிலையைத் தொடர சில மாதங்களாகும், அதுவரை அவர்கள் பசியில்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தற்போது நிவாரணப் பொருட்கள் வழங்க தொடங்கியுள்ளனர். அதன்படி ரஜினி மக்கள் மன்றத்தின் வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளராகவுள்ள சோளிங்கர் ரவி, சோளிங்கர் மற்றும் அதனை சுற்றியுள்ள ஏழை, எளிய, கூலித் தொழிலாளர் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களான அரிசி, மளிகை மற்றும் காய்கறி தொகுப்பினை கடந்த ஜீன் 14 ஆம் தேதி வழங்கினார்.
இதில் தனியார் பள்ளி மைதானத்தில் பிரமாண்டமான முறையில் ஏற்பாடுகள் செய்து ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட தூய்மைப் பணியாளர்கள், முடித் திருத்தும் தொழிலாளர்கள், நாதஸ்வரம், தவில் கலைஞர்கள், கிராமிய நாடக கலைஞர்கள், சலவைத் தொழிலாளர்கள், லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் டோலி தொழிலாளர்கள், மருத்துவ சுகாதார பணியாளர்கள் என மொத்தம் 550 பேருக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை சோளிங்கர் வட்டாட்சியர் பாஸ்கர், சோளிங்கர் காவல் ஆய்வாளர் வெங்கடேஷ், சோளிங்கர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் இளங்கோவன், சோளிங்கர் தேர்வுநிலை பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் வடிவேல் போன்றோர் சிறப்பு விருந்தினராகச் சென்று ஏழை மக்களுக்குப் பொருட்களை வழங்கினர்.
நிகழ்ச்சியில் பேசிய மாவட்டச் செயலாளர் சோளிங்கர் இரவி, இப்போது இங்கே நான் உங்கள் முன் நிற்பதற்குத் தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் தான் காரணம். ஏனென்றால் இந்தக் கொடிய கரோனா பரவாமல் இருக்க அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவின் காரணமாக அனைத்துத் தரப்பினரும் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டு விட்டனர். இந்நிலையில் மக்கள் தலைவர் வழிகாட்டுதல் படி தமிழகமெங்கும் அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட செயலாளர்களும், மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர நிர்வாகிகள் அனைவரும் தங்களால் இயன்ற உதவிகளை மக்களுக்குச் செய்து வருகின்றனர். அது போலவே ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் முழுவதும் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர நிர்வாகிகள் மூலம் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றனர்.
இந்நிலையில் நான் மட்டும் தாமதமாக நற்பணிகள் மேற்கொள்வதற்குக் காரணம் சிறு வியாபாரியாக இருந்தாலும், உங்களை போலவே நானும் இந்த ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டேன். அதன் வலியையும் உணர்ந்தேன், இந்நேரத்தில் நமக்கே இப்படி இருக்கிறதென்றால் தினக் கூலி வேலை செய்யும் அடித்தட்டு மக்களின் நிலை எண்ணி பலமுறை அழுதும் இருக்கின்றேன். நான் கொடுக்கும் இந்த உதவி பெரிதல்ல இருப்பினும் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக ஒரு வேளைக்காவது எனது பங்களிப்பு இருக்க வேண்டும் என்று தான் இப்போது உதவிகள் செய்ய களம்மிறங்கியுள்ளேன். நான் பணம், பொருள் என எதையும் சேர்த்து வைக்கவில்லை என்றாலும் என் தலைவரின் ஆசீர்வாதமும், உங்களின் அன்பையும் சம்பாதித்து வைத்துள்ளேன், அது போதும் எனக்கு.
எந்தவொரு சோதனையும் நிரந்தரமல்ல, இந்த கரோனா நோய்ச் சோதனை நிரந்தரமானதல்ல, மருத்துவர்கள் வெகுவேகமாக இதற்கான மருந்தை கண்டுபிடிபிடித்துவிடுவார்கள். அப்போது நாம் இப்போது அனுபவிக்கும் இந்தத் துன்ப நிலையும் கடந்து போகும். இப்போது வாழ்விழந்து போய்வுள்ள மக்களுக்கு நாம் கைகொடுத்துத் தூக்கிவிட வேண்டும், அதில் ஒரு கை ரஜினி மக்கள் மன்றத்தின் கைகளாக இருக்க வேண்டும் என்பதற்காகவே முயற்சிகளைச் செய்துள்ளோம். கிராமங்களில் உள்ள ஏழைமக்களுக்கு எங்கள் மன்ற நிர்வாகிகள் நேரடியாகச் சென்று உதவிப் பொருட்களை வழங்குவது போல் ஏற்பாடு செய்துள்ளோம். தயவுசெய்து சொல்கிறேன் மக்கள் தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் சொல்வது போல ஆரோக்கியம் போச்சுன்னா, வாழ்க்கையே போச்சு. அதனால வீட்டை விட்டு வெளியே வரும் போது முகக் கவசம் அணிந்து கொண்டும், சமூக இடைவெளியுடனும் இருங்கள், அடிக்கடி கைகளைச் சுத்தமாகச் சோப்புப் போட்டு கழுவி நம் சுற்றுபுறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ளவும் என்றார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் தெர்மோமீட்டர் மூலம் வெப்பப் பரிசோதனை செய்து, கைகளில் சானிடைசர் தெளிக்கப்பட்டு, முகக் கவசம் அணிய வைத்து சமூக இடைவெளியைப் பின்பற்றி நிகழ்ச்சி நடைபெற்றது. சோளிங்கர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 5 ஆயிரம் குடும்பங்களுக்கு உதவி பொருட்கள் வழங்க முடிவு செய்துள்ளனர். அதன்படி முதல் கட்டமாக 2,600 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி, மளிகை மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தரத்துவங்கியுள்ளனர்.