அதிமுக - பாஜக கூட்டணியில், அண்ணாமலை பேச்சுகளால் முரண்கள் ஏற்பட்டு முன்னாள் அமைச்சர்கள் எதிர்வினையாற்றும் சம்பவங்கள் தொடர்ந்து வந்தன. அப்படி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அண்ணாமலை பேசியது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு ஜெயக்குமார், சி.வி. சண்முகம் ஆகிய முன்னாள் அமைச்சர்கள் எதிர்வினையாற்றி இருந்தனர். அதேபோல அண்மையில் அண்ணா குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கும் அதிமுக தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன.
முன்னாள் முதல்வரும், அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா குறித்து அண்ணாமலை பேசியபோது கண்டனத் தீர்மானம் நிறைவேற்றிய அதிமுக, முன்னாள் முதல்வர் அண்ணா குறித்துப் பேசியதற்கு பா.ஜ.க.வுடனான கூட்டணியையே முறித்து வெளியேறியது.
இந்நிலையில்தான் அதிமுகவின் 52ம் ஆண்டு விழா தமிழ்நாடு முழுக்க அக்கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், அது தொடர்பாக நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் என எதுவாக இருக்கட்டும் எடப்பாடியின் கரத்தை வலுப்படுத்துங்கள். இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து எடப்பாடி சொல்லுகின்ற பிரதமர்., ஏன் சூழ்நிலை வந்தால் எடப்பாடியாரே பிரதமராக வரக்கூடிய அளவுக்கு 40 தொகுதிகளிலும் அற்புதமான தீர்ப்பை தமிழ்நாட்டு மக்கள் வழங்கினால், எடப்பாடியின் கரம் ஓங்கினால் டெல்லியில் எடப்பாடி சொல்லக்கூடியது நடக்கும்” என ஆக்ரோஷம் பொங்க பேசினார்.
இந்நிலையில் இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க. தமிழ்நாடு தலைவர் அண்ணாமலையிடம் இது தொடர்பாகச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இந்தக் கேள்வி கேட்டதும் அண்ணாமலை சிரித்தார். பிறகு பேசிய அவர், “சிரிப்பு தான் எனது பதில். பிரதமர் பதவிக்கு என மரியாதை உள்ளது. மூன்றாவது முறையாக மோடி தான் பிரதமர் வேட்பாளர். எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் கனவு இருக்கலாம்” என்று கூறினார்.