புதுச்சேரி யூனியன் பிரதேசம் 15வது சட்டப்பேரவையின் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதலாவது நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் இன்று (26.08.2021) காலை தொடங்கியது. ஆளுநர் மாளிகையில் இருந்து சரியாக 9.25 மணிக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் சட்டப்பேரவைக்கு வருகை தந்து, காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் சட்டப்பேரவையில் தமிழிசை செளந்தரராஜன் முதல்முறையாக ஆளுநர் உரையைத் தமிழில் நிகழ்த்தினார். அவர் உரையாற்றியது; “‘மருத்துவர், நோயாளியின் நிலை, நோயின் அளவு, மருந்து கொடுக்கும் காலம் இவற்றை அறிந்து மருத்துவம் செய்ய வேண்டும்' என்ற திருக்குறளுக்கு ஏற்ப covid-19 பரவியபோது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுரக் குடிநீர் ஆகிய சித்த மருந்துகள் வழங்கப்பட்டன. பொது மக்களை நாடிச் சென்று மருந்துகள் வழங்குதல், சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு பயிற்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தாலும் மதிய உணவு திட்டத்தின் கீழ் 50,838 மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இலவச பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வழங்கல் திட்டத்தின் கீழ் 1,02,439 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 16,192 மாணவர்கள் மற்றும் பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 17,643 மாணவர்களும் பலனடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற தேசிய திறனாய்வு தேர்வில் மாநில அளவில் வெற்றி பெற்ற 20 மாணவர்களுக்கு ஒருமுறை ஊக்கத் தொகையாக ரூபாய் 50 ஆயிரம் வழங்கப்பட்டது. மத்திய அரசு நடத்திய தேசிய திறனாய்வு இரண்டாம் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகையாக 10,000 வழங்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியான மாணவர்கள் நிதியுதவி பெற்று உயர் கல்வியைத் தொடரும் விதமாக பெருந்தலைவர் காமராஜர் நிதி உதவி திட்டத்தின் கீழ் நிதியுதவியாக ரூபாய் 18 கோடியே 77 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் கடந்த ஆண்டு 438 மருத்துவக் கல்லூரி மாணவர்களும், 1,384 பொறியியல் கல்லூரி மாணவர்களும், 567 செவிலியர் பள்ளி மாணவர்களும் பயனடைந்துள்ளனர்.
இந்த அரசு, கரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுவருகிறது. அதில் பெருமளவு வெற்றியும் கண்டிருக்கிறது. விரைவில் கரோனா பாதிப்பில் இருந்து விடுபடும் என்று நான் நம்புகிறேன். இந்த அரசு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற கடுமையாக பாடுபடும் என்றும், எதிர்வரும் காலங்களில் வறுமை மற்றும் வேலையின்மை இல்லாத சிறந்த யூனியன் பிரதேசமாக புதுச்சேரி ஆட்சிப் பரப்பினை உருவாக்கும் என்றும் நான் நம்புகிறேன்.” இவ்வாறு ஆளுநர் உரையில் குறிப்பிட்டார்.