விரைவில் மகளிர் கொள்கை வெளியிடப்பட உள்ளது என அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார்.
இன்று (08.03.2023) உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் திரைப் பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஔவையார் சிலைக்கு அமைச்சர்கள் கீதா ஜீவன், சாமிநாதன், மேயர் பிரியா உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணம், தொழில்பயிற்சி வழங்கப்படுகிறது. சுய உதவிக் குழுக்களின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டும் புதிய சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டும் அவர்களுக்கு கடன் உதவித்தொகை வழங்கப்படுகிறது. விரைவில் மகளிர் கொள்கை வெளியிடப்பட உள்ளது. கைம்பெண் நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பெண்கள் நலம் பெறுவதற்காகவும் அவர்களது வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும் என்பதற்காவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்” எனக் கூறினார்.
முன்னதாக, உலக மகளிர் தினமான இன்று (மார்ச் 8) மகளிர் கொள்கையை வெளியிட அரசு முடிவு செய்ததும் அதில் மகளிர் மேம்பாடு, பாதுகாப்பு தொடர்பான பல்வேறு அம்சங்கள் இடம்பெற இருந்ததும் குறிப்பிடத்தக்கது.