Published on 19/09/2019 | Edited on 19/09/2019
வன்னியர் சமூக தலைவர் ராமசாமி படையாச்சியார் பிறந்தநாள் விழாவை மையமாக வைத்து சர்ச்சைகள் கிளம்பியதாக சொல்லப்படுகிறது. ராமசாமி படையாச்சியாரின் பிறந்த நாள் செப்டம்பர் 16-ந் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு முதல்வர் எடப்பாடியும், துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சும் சென்னையில் இருந்தும் கூட படையாச்சியார் சிலைக்கு மரியாதை செய்ய வராதது அந்த சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்கள் மத்தியில் பலத்த அதிருப்தியை உருவாக்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. அதே போல் எந்தக் காலத்திலும் படையாச்சியார் பிறந்த நாளில் அவர் சிலைக்கு மாலை அணிவிக்காதவரான பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இந்த ஆண்டு கிண்டியில் இருக்கும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதால் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி விசாரித்த போது, கடந்த இரண்டு வாரமாக சமூக ஊடகங்களில் வன்னியர் அமைப்புகள் சில, ராமதாஸ் பற்றிய விமர்சனங்களைப் பரப்பி வந்ததாக சொல்லப்படுகிறது. குறிப்பாக அவர் வன்னிய மக்களையும் அந்த சமூகத்தைச் சேர்ந்த தலைவர்களைப் புறக்கணிக்கிறார், வன்னியர் அறக்கட்டளைச் சொத்துக்களில் கவனம் செலுத்துறார் என்று விதவிதமாக புகார்களை எழுப்பியிருப்பதாக கூறுகின்றனர். இதைப் பார்த்து திகைத்துப் போன ராமதாஸ், வன்னிய சமூக மக்களின் மனதைக் கவர படையாச்சியாருக்கு மரியாதை செய்திருக்கார் என்று கூறிவருகின்றனர்.