Skip to main content

மக்களவைத் தேர்தல்; பா.ஜ.க.வுக்கு ப.சிதம்பரம் சவால்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
P. Chidambaram challenge to BJP on Lok Sabha elections

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குறுதிகள் கொண்ட அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அக்கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் அறிக்கையை வெளியிட்டனர். 5 தலைப்புகளில் 25 வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அளித்தது. 

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகள் குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக, ப.சிதம்பரம் இன்று (06-04-24) காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இந்த தேர்தலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். சமூக நீதி, அரசியல் நீதி, பொருளாதார நீதி ஆகியவற்றுக்கு தேர்தல் அறிக்கையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மாநில உரிமைகளை மதிக்கும் ஒன்றிய அரசு அமைப்பது குறித்து காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது. மாநில உரிமைகள் குறித்து காங்கிரஸ் குறிப்பிட்டுள்ள 12 அம்சங்களில் ஏதாவது ஒன்றை ஏற்க பா.ஜ.க தயாரா?. 

தி.மு.க, காங்கிரஸ் தேர்தல் அறிக்கைகள் ஒத்துப்போவது இயற்கையான ஒன்றுதான். முரண்பட்ட கூட்டணியை காங்கிரஸ், தி.மு.க அமைக்கவில்லை. ஒன்றிய அரசு விதிக்கும் செஸ் வரியை குறைப்போம் என காங்கிரஸ் உறுதி அளித்துள்ளது. செஸ் வரி குறைக்கப்படும் போது பெட்ரோல், டீசல் விலை தானாகவே குறையும்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்