பிரதமர் நரேந்திர மோடி இந்த முறை தமிழ்நாட்டில் ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் தான் வேட்பாளராக போட்டியிடுவார் என்று சில மாதங்களுக்கு முன்பு வரை பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. அதனை உண்மை தான் என்பது போல ராமநாதபுரம் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசியிருக்கிறார்.
ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக கூட்டணி கட்சிகள் சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். இதனையறிந்த அதிமுகவினர் மேலும் ஒ.பன்னீர்செல்வங்களை சுயேட்சை வேட்பாளர்களாக களமிறக்கி உள்ளனர். இந்த நிலையில் நேற்று அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் ஓபிஎஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார்.
அறந்தாங்கி நகரில் அண்ணாசிலை அருகே பேசும் போது, நான் போட்டியிடுவதாக சொன்னதும் எங்கிருந்தோ ஒ.பன்னீர்செல்வங்களை அழைத்து வந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அவர்கள் எல்லாம் "ஒ.பன்னீர்செல்வம் இல்லை, நான் மட்டும் தான் ஓ.பன்னீர்செல்வம்". முதலமைச்சர், நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தவன் நான். புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதி பறிபோனதும் அம்மா என்னை அழைத்து தொகுதியை மீட்க உண்ணாவிரதம் இருக்கச் சொன்னார். ஆனால், இந்த முறை பிரதமரிடம் நேரடியாகச் சொல்லி மீட்டுத்தருவேன். இந்த ராமநாதபுரம் தொகுதி பிரதமர் மோடி நிற்க வேண்டிய தொகுதி அவர் என்னை போட்டியிட அனுப்பி வைத்திருக்கிறார். எனக்காக விட்டுக்கொடுத்திருக்கிறார் என்றார்.