தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று, அன்று பதிவாகும் வாக்குகள் மே மாதம் 2ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனையடுத்து அரசியல் கட்சியினர் தங்கள் தேர்தல் பணிகளில் வேகம் காட்டிவருகின்றனர். அனைத்து கட்சி வேட்பாளர்களும் அவர்கள் தொகுதியில் மக்களோடு மக்களாக கலந்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.
சமீபத்தில் தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு ஓ.பி.எஸ். பேட்டி அளித்திருந்தார். அதில், “சசிகலா விலகியதை பெருமிதமாகத்தான் பார்க்கிறேன். எனக்கு அவர் மீது இப்போது அல்ல, முதலிலிருந்தே வருத்தம் கிடையாது. ஜெயலலிதா காலமானதற்குப் பிறகு, அவர் மீது சில குற்றச்சாட்டுகள் இருந்தன. ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து எழுந்ததும் அளித்த பேட்டியில், ‘ஜெயலலிதா மரணத்தில் அவர் மீது சில அவப்பெயர்கள் இருக்கின்றன. அதற்கு நீதி விசாரணை வைத்து அவர் நிரபராதி என நிரூபித்தால் அவர் மீது இருக்கும் கெட்ட பெயர் விடுபடும்’ என்றுதான் நான் சொன்னேன். அவர் மீது எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது. 32 ஆண்டுகாலமாக அவர் ஜெயலலிதாவுடன் இருந்திருக்கிறார்” என்று தெரிவித்தார்.
மேலும், அவர் மீண்டும் அரசியலுக்கு வந்தால் கட்சியில் இணைக்கப்படுவாரா என்ற கேள்விக்குப் பதில் அளித்த ஓ.பி.எஸ்., “முதல்வர் அதற்கு வாய்ப்பே இல்லை என்று சொல்லியிருக்கிறார். என்னை பொருத்தவரையில், மனிதாபிமானம் அடிப்படையில் பார்த்தால் அவர் நான்கு ஆண்டுகாலம் சிறை தண்டனை அனுபவித்துவிட்டார். ஒரு தனிப்பட்ட நபருக்காகவோ, ஒரு குடும்பத்திற்காகவோ கட்சி தற்போது இயங்கவில்லை. அது ஜனநாயக முறைப்படி இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்த அமைப்பை அவர் ஏற்றுக்கொண்டால் அவரை சேர்த்துக்கொள்வதைப் பரிசீலிக்கலாம்” என்று தெரிவித்திருந்தார். ஓ.பி.எஸ்.சின் இந்தக் கருத்து அதிமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இன்று (24.03.2021) காலை திடீரென சேலத்தில் உள்ள தனியார் ஓட்டலில் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் இருவரும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த ஆலோசனையில் சசிகலா குறித்து பேசப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில், ஓ.பி.எஸ். இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.