புதுக்கோட்டையில் நடைபெறும் பாஜக கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திருச்சிக்கு வந்தார். அங்கு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், “பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் உடன் கூட்டணி வைக்கவோ, சமரசம் செய்து கொள்வதற்கோ, திமுகவிற்கு குறைந்தபட்ச தகுதி வேண்டும். குடும்ப ஆட்சி நடத்தக்கூடாது, ஊழலற்ற ஆட்சி நடத்த வேண்டும், நல்லாட்சி புரிய வேண்டும் என்பதே அந்த குறைந்தபட்ச தகுதிகளாகும். இந்த மூன்று தகுதிகளுமே இல்லாத திமுக அரசு எப்படி குறைந்தபட்ச ஆதரவு கூட்டணி குறித்து பேசுவார்கள்? எந்த காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்கு திமுகவிற்கு தகுதி கிடையாது.
டெல்லி சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலின், தான் டெல்லி செல்வது பாஜகவுடன் சமரசம் செய்து கொள்வதற்கோ, குனிந்து கும்பிடுவதற்கோ அல்ல என தெரிவித்துள்ளார். டெல்லி செல்லும் எந்த மாநில முதல்வரும் இதுபோல கூறுவது கிடையாது.
தமிழகத்தின் நிதி நிலைமை அதலபாதாளத்தில் உள்ளது. தமிழகத்திற்கு 6 லட்சம் கோடி கடன் உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த ஒரு வருட காலத்தில் ஒரு லட்சம் கோடி கடன் சுமை ஏறி உள்ளது. தற்போது இவ்வாண்டு கடன் 1.20 லட்சம் கோடியாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. எந்த ஒரு மாநிலமும் டாஸ்மாக் வருமானத்தில் வாழ்ந்ததாக சரித்திரம் கிடையாது.
திமுக கொடுத்த 508 வாக்குறுதிகளில் நூற்றுக்கு மேற்பட்டவை இலவச அறிவிப்புகள் தான். இதே நிலை தொடர்ந்தால் இலங்கையை போல் தமிழகமும் நிதி நிலைமையால் தள்ளாடும் நிலை வரும். பொதுமக்கள் சுயமாக உழைத்து முன்னேறி வருகிறார்கள். அரசை நம்பி இல்லை எனவே தமிழகம் தப்பித்து கொண்டுள்ளது” என்று தெரிவித்தார்.