எம்ஜிஆரின் 35 ஆவது நினைவு நாளான வரும் 24 ஆம் தேதி அவரது நினைவிடத்தில் அஞ்சலி மற்றும் உறுதிமொழி ஏற்பிற்கு அனுமதி கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “முன்னிலைப் படுத்துவது வேறு உருவாவது வேறு. திமுக ஆரம்பிக்கப்பட்டபோது அதில் என் அப்பாவும் உறுப்பினர். என் அப்பாவின் அண்ணன் பெயர் பெரியார். அவரது இயற்பெயர் தேசிங்கு. என் அப்பாவிற்கு அண்ணா சீட்டு கொடுத்தார். கலைஞர் கொடுக்கவில்லை.
1968ல் நடந்த தேர்தலில் 1 ஆவது வட்டத்தில் என் அப்பா கவுன்சிலரானார் பெயர் துரைராஜ். துரைராஜ் கவுன்சிலர் ஆனது போதாது என்று நிலைக்குழு தலைவர், மண்டல குழுத் தலைவர் போன்ற பதவிகளை அண்ணா என் அப்பாவிற்கு வழங்கினார். அதுமட்டுமின்றி சிறு சேமிப்பு துறைத் தலைவர் என்ற ஒரு பதவியை உருவாக்கி அதன் தலைவராக எம்ஜிஆரை போட்டு கார்ப்பரேசன் சார்பில் மெம்பராக என் அப்பாவை அண்ணா நியமித்தார்.
என்னை என் அப்பா முன்னிலைப்படுத்தவில்லை. நானாகச் சென்று எம்ஜிஆரை சந்தித்தேன். அப்போது ராயபுரத்தில் எம்ஜிஆர் இளைஞரணி துணைத்தலைவர் பதவி கொடுத்தார். அதன் பின் ஜெயலலிதா என்னை தொகுதி தலைவராக ஆக்கினார். 84 ஆம் ஆண்டும் 89ஆம் ஆண்டும் சீட் கிடைக்கவில்லை. அதன் பின் 91ல் ஜெயலலிதாவே நேரடியாக என்னை அழைத்து எனக்கு சீட் கொடுத்தார். 91லிருந்து தொடர்ச்சியாக ஜெயலலிதாவுடன் பயணித்தவன். அமைச்சராக இருந்த காலத்திலும் சபாநாயகராக இருந்த காலத்திலும் ஒரு தடவை கூட ஜெ.விடம் சென்று கேட்டது கிடையாது. ஜெயலலிதாவிடம் என் மகனுக்கு பதவி சீட் கேட்டபின் நான் பதவியில் நீடிக்கமுடியுமா. வாரிசு அரசியலை என்றைக்கும் விரும்பாதவர் ஜெயலலிதா.
சபாநாயகர் பதவியை நான் ராஜினாமா செய்தபோது ஜெயலலிதா அது குறித்து விசாரித்து என் குடும்பத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் எனக் கூறி, என் மகனை அழைத்து தென் சென்னை தொகுதி கொடுத்து அங்கு நிற்கச் சொன்னார்கள். அவரை நான் அடையாளம் காட்டவில்லை” என்றார்.