நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றினார். பிறகு சுதந்திர தின கொண்டாட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “என்னுடைய இரண்டாவது பிரதமர் பதவிக் காலத்தில் 10வது முறையாக உரையாற்றுகிறேன். இந்தியா அடைந்துள்ள சாதனைகளை அடுத்த ஆண்டு மீண்டும் இதே இடத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மக்களிடம் பட்டியலிடுவேன்” என்று தெரிவித்தார்.
இதற்கு காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “தேர்தலில் வெற்றி பெறுவதும், தோல்வி அடைவதும் மக்களின் கைகளில் உள்ளது. மீண்டும் செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றுவேன் என்று பிரதமர் கூறுவது அவரது ஆணவத்தைக் காட்டுகிறது. அவர் தொடர்ந்து எதிர்க்கட்சிகளை விமர்சித்து வருகிறார். சுதந்திர தின உரையில் கூட எதிர்க்கட்சிகளைப் பற்றி விமர்சனம் செய்பவரால் நாட்டை எப்படி கட்டி எழுப்ப முடியும். அடுத்த ஆண்டு அவர் மீண்டும் தேசியக் கொடியை ஏற்றுவார். ஆனால், அதை அவரது வீட்டில் செய்வார்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில் மல்லிகார்ஜுன கார்கேவின் கருத்துக்கு பதில் அளித்த அதிமுக எம்.பி தம்பிதுரை, “பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை. இந்தியாதான் அவரது குடும்பம். செங்கோட்டைதான் அவரது வீடு. அதனால் பிரதமர் மோடி அடுத்த ஆண்டு அவரது வீட்டில் தான் தேசியக் கொடி ஏற்றுவார் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சரியாகத்தான் சொல்லியுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.