அதிமுக சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ.வும் மாவட்டச் செயலாளருமான ராமச்சந்திரன் மீண்டும் குன்னம் தொகுதியில் போட்டியிடுகிறார். திமுக சார்பில், 2011 சட்டமன்றத் தேர்தலில் இங்கு எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்ற அரியலூர் மாவட்டச் செயலாளர் சிவசங்கர், ராமச்சந்திரனை எதிர்த்து போட்டியிடுகிறார். மீண்டும் 2016இல் குன்னம் தொகுதியில் போட்டியிடுவதற்கு ஆவலாக இருந்த சிவசங்கரை, அரியலூர் தொகுதிக்குத் திசை திருப்பியது கட்சித் தலைமை. அங்கு போட்டியிட்ட அவர், அரசு கொறடா ராஜேந்திரனிடம் தோல்வியைக் கண்டார்.
இந்த முறை அரியலூரில் மீண்டும் போட்டியிட்டு அரசு கொறடாவை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக, கடந்த 5 ஆண்டுகளாக அரியலூர் தொகுதி முழுவதும் தீவிர களப்பணியில் இறங்கி போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என்று நடத்தி மக்கள் மத்தியில் இடம்பிடித்திருந்தார் சிவசங்கர். ஆனால், திடீரென்று அரியலூரில் இருந்து குன்னத்திற்குத் திசை திருப்பிவிட்டது கட்சித் தலைமை. ஏற்கனவே எம்.எல்.ஏ.வாக இருந்த அனுபவத்தின் அடிப்படையில் மக்களிடம் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார் சிவசங்கர்.
அதிமுக ராமச்சந்திரன் உடையார் சமூகத்தைச் சேர்ந்தவர். சிவசங்கர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். சிவசங்கருக்கு வன்னியர் வாக்குகள் கிடைப்பதில் சில தடைகள் இருப்பதாக கூறுகின்றனர். இதனால், வன்னியர்களின் வாக்குகளைப் பெறுவதற்கு அதிமுக ராமச்சந்திரன் தாராளம் காட்டி வருவதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். அதனை ஈடுகட்டும் அளவில் லப்பைக்குடிக்காடு போன்ற பகுதிகளில் உள்ள பெருமளவு முஸ்லிம் வாக்குகளும், ஆலத்தூர் ஒன்றியத்தில் நேருவின் மாமாவும் கட்சியின் ஒன்றியச் செயலாளருமான கிருஷ்ணமூர்த்தியின் பலம் அப்பகுதியின் வாக்குகளை சிவசங்கருக்கு கிடைக்கும் என கணக்கு போடுகின்றனர் திமுகவினர்.
ராமச்சந்திரன் கடந்த 5 ஆண்டுகளில், ஏழை எளிய மக்களுக்கும் நலிவுற்ற நிலையில் இருந்த தனது கட்சிக்காரர்களுக்கும் பணத்தை வாரி வழங்கி ‘வள்ளல்’ என்று பெயர் எடுத்துள்ளார். சிவசங்கர் வெற்றிபெற வேண்டுமானால் ஆ.ராசாவும், களப்பணியில் இறங்க வேண்டும் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். காரணம், ஆ. ராசாவை அரசியலுக்கு கொண்டு வந்தவர் சிவசங்கரின் தந்தை மறைந்த சிவசுப்பிரமணியன். அதன் காரணமாக ராசாவும் சிவசுப்பிரமணியன் குடும்பமும் மிகுந்த நெருக்கம் என்கின்றனர். இருவருக்குமிடையான கடும் போட்டியில் ராமச்சந்திரன் சற்று உற்சாகமாக இருப்பதாக தெரிகிறது.
இவர்களோடு நாம் தமிழர் கட்சி சார்பில் வழக்கறிஞர் அருள், தினகரனின் அமமுக சார்பில் அதன் மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் சாதிக் பாஷா ஆகியோரும் களத்தில் உள்ளனர். இவர்களோடு சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 23 பேர் போட்டி போடுகின்றனர். பிரதான போட்டி சிவசங்கர் மற்றும் ராமச்சந்திரன் ஆகிய இருவருக்குமிடையேதான். நாம் தமிழர் கட்சி அருள் சில ஆயிரம் வாக்குகளைப் பெறுவதற்கு வாய்ப்பு உண்டு.