ஜெயலலிதா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர் என அண்ணாமலை பேசியது அதிமுகவினர் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அண்ணாமலையின் செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது பாஜக தேசிய தலைமையின் கடமை. எதற்கும் ஒரு அளவு இருக்கிறது. இதற்கு மேல் பொறுமை காக்க முடியாது” என காட்டமாக பதில் அளித்திருந்தார்.
இந்நிலையில் தேசிய மகளிர் ஆணைய தலைவர் குஷ்பூ இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஜெயக்குமார் பேசியதற்கு என்னால் பதில் சொல்ல முடியாது. அவர் நேரடியாக அண்ணாமலையை பார்த்து கேள்வி கேட்கிறார். ஜெயக்குமாரின் கேள்விக்கு அண்ணாமலை தான் பதில் சொல்ல முடியும். அதிமுக உடனான கூட்டணி தொடரும் என அமித்ஷாவே சொல்லியுள்ளார். அதிமுக உடன் மோதல் போக்கெல்லாம் இல்லை” என்றார்.
அதைத் தொடர்ந்து குஷ்பூவிடம், “ஜெயலலிதா ஊழல்வாதி என அண்ணாமலை சொல்லியுள்ளார். கூட்டணியில் இருந்துகொண்டு அண்ணாமலை இவ்வாறு பேசியுள்ளாரே” என்கிற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், “அண்ணாமலை உண்மையைத் தான் பேசுவார். அரசியல் தெரிந்துதான் பேசுவார். சட்டம் தெரிந்தவர். அண்ணாமலை மாநிலத் தலைவராக இருப்பதால் அவருக்கு என்ன நேரத்தில் என்ன பேச வேண்டும் என தெரியும். நாம் சொல்லிக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் ஜெயிலுக்கு சென்றார். எவ்வளவு குற்றச்சாட்டுகள் வந்தது என்று நமக்கு தெரியும். தொடர்ந்து இபிஎஸ் முதலமைச்சராக இருந்துள்ளார். இபிஎஸ் உடனான எங்கள் நட்பு அப்படியேதான் இருக்கிறது. அதில் மாற்றம் இல்லை. கூட்டணி என்று இருந்தால் சில வார்த்தைகள் வரத்தான் செய்யும்” என்றார்.
“ஜெயலலிதா ஊழல்வாதி என்றால் ஊழல் கட்சியுடன் ஏன் கூட்டணி வைக்கிறீர்கள்” என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, “கூட்டணி எங்களுக்கு இருக்கிறது. ஏன் வைக்கிறீர்கள் என்பது கிடையாது. அண்ணாமலை எந்த ரீதியில் சொன்னார் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். பாஜகவின் செய்தித்தொடர்பாளர் நான் இல்லை. அண்ணாமலையின் பேச்சுக்கு அவர்கள் பதில் கொடுப்பார்கள்” என்றார்.