ஒரு வாரத்திற்குள் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் பயணம் மேற்கொள்ள இருப்பதாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மக்கள் நீதி மய்யக் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதன் பின் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் கட்டமைப்பு, பூத் கமிட்டி, 2024 தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் பற்றி பேசப்பட்டது.
ஒரு முக்கியப் பயணத்திற்கான முன்னேற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தோம். அதைப்பற்றி கட்சிக்காரர்கள் தகவல் தெரிவிப்பார்கள். கூட்டணி குறித்து ஏதும் விவாதிக்கவில்லை. கூடிய விரைவில் அது உங்களுக்குப் புரிய வரும். எந்தத் திசையை நோக்கி நான் சென்று கொண்டு உள்ளேன் என்பது விரைவில் உங்களுக்குப் புரியும். என் பயணத்தை நீங்கள் புரிந்து கொண்டாலே அது புரிந்து விடும். வெகு விரைவில் பயணத்தைத் துவங்க உள்ளேன். ஒரு வாரத்திற்குள்ளாகவே பயணம் துவங்கப்படும்.
ஆவின் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையைத் திடீரென ஏற்றக்கூடாது. தீபிகா படுகோன் உடையை வைத்து அரசியல் செய்கிறார்கள். அதற்கு என் கருத்துகளைக் கேட்கின்றனர். அது நம் அரசியல் அல்ல. அதைப்பற்றி விவாதிக்கத் தேவையில்லை” எனக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் துணைத்தலைவர் செய்தியாளர்களைச் சந்தித்த போது, ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக காங்கிரஸ் கட்சி எம்.பி. ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமைப் பயணத்தில் வரும் டிசம்பர் 24 இல் கமல்ஹாசன் இணைய உள்ளதாகத் தெரிவித்தார்.