Skip to main content

ஜுஸ் கொடுத்தார், அந்த பெண் மயங்கினார், ஜெயக்குமார் தவறாக நடந்து கொண்டார்: வெற்றிவேல் பகீர் பேட்டி

Published on 23/10/2018 | Edited on 23/10/2018
Vetriivel


டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமைச்சர் ஜெயக்குமார் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார். 

 

அதிமுக மூத்த அமைச்சர்கள் ஜெயக்குமார் ரொம்ப நல்லவர் என்று சொல்லுகிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். கட்சிக்கு அவப்பெயராக நினைக்கிறீர்களா?

 

பெண்கள் விசயத்தில் ஜெயலலிதா கண்டிப்பாக இருப்பார். அந்த விசயத்தில் என்றைக்கும் சமாதானம் ஆக மாட்டார்கள். அம்மா ஆட்சி என்று சொல்லிக்கிட்டு இந்த மாதிரி செயல் நடந்திருக்கிறது. ஜெயக்குமாரோடு இது முடியவில்லை. சில விசயங்கள் வெளியே வந்தால் அசிங்கமாய்விடும். 

 

ஜெயக்குமார் தவிர வேறு சிலரும் இருக்கிறார்களா?

 

இருக்கிறார்கள்.

 


 
யார் யார் என்று சொல்ல முடியுமா?
 

அது சொல்ல முடியாது. இதனை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் தங்களை திருத்திக்கொண்டால் சரி. என்னிடம்  வேறு ஆடியோ இருக்கிறது. 
 

அந்த ஆடியோவை வைத்து ஜெயக்குமாரை மிரட்டுகிறீர்களா?
 

நான் ஏன் மிரட்டுகிறேன். எனக்கும் அவருக்கும் சொத்து பிரச்சனையா இருக்கிறது. ஒரு பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக குரல் கொடுப்பது தவறா. நீங்கள் கொடுக்க மாட்டீர்களா. நேற்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் குற்றாலம் செல்வதாக விசயத்தை பெரியதாக்கினார்கள். இவ்வளவு பெரிய குற்றச்சாட்டான இந்த பெண் விசயத்தை ஏன் பெரியதாக்கவில்லை. எவ்வளவு பெரிய குற்றச்சாட்டு. 
 

பாதிக்கப்பட்ட பெண் உங்கள் பாதுகாப்பில் இருக்கிறார்களா?
 

என் பாதுகாப்பில் இல்லை.
 

ஜெயக்குமாரால் அந்த பெண் பாதிக்கப்பட்டதாக சொல்கிறீர்கள். ஆனால் அவர், இதன் பின்புலத்தில் நீங்கள் இருப்பதாக கூறுகிறாரே?
 

சொல்லட்டும். உண்மையை சொல்லட்டும். அதைவிட்டுவிட்டு ஏன் எங்கள் பொதுச்செயலாளர், துணைப் பொதுச்செயலாளர் பெயரை இழுப்பது ஏன். மாபியா கும்பல் என்கிறார். இப்போது அவர் மாமியார் கும்பலில் மாட்டிக்கிட்டார். 
 

பாதிக்கப்பட்ட பெண்ணும், அவர்கள் குடும்பமும் உங்களை அணுகினார்களா?
 

அதையெல்லாம் தேவைப்படும்போது சொல்வோம். தேவைப்படும்போது ஆதாரங்களோடு வெளிவரும். இல்லாததை நான் சொல்ல மாட்டேன். எடப்பாடி பழனிசாமி மீது ஊழல் குற்றச்சாட்டு வைத்தோம். இப்போது அது சிபிஐ வரை சென்றதா இல்லையா. 
 


 
அந்த பெண் குடும்பத்தினரின் சம்மதத்தோடுதான் ஆடியோவை வெளியிட்டீர்களா?
 

நான் இந்த ஆடியோவை வெளியிடவில்லை. யார் இந்த ஆடியோவை வெளியிட்டார்கள் என்று எனக்கு தெரியாது. அதற்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை.
 

ஏற்கனவே அமைச்சர்கள் மீது பல குற்றச்சாட்டுக்கள் சொல்லப்பட்டது. எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த சமயத்தில் இந்த மாதிரியான குற்றச்சாட்டு....
 

அது வேறு விசயம். இது பெண் பாதிக்கப்பட்ட விசயம். இந்த மாதிரியான விசயத்திற்கு பதவியில் இருந்து விலகிவிட்டுதான் விசாரணை நடத்த வேண்டும். குரல் தன்னுடையது இல்லை என்று சொன்னார், குழந்தை தன்னுடையது இல்லை என்று சொன்னாரா? 
 

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாரிடம் பேசிவிட்டுதான் இந்த ஆடியோ வெளியிடப்பட்டதா? 
 

நான் இந்த ஆடியோவை வெளியிடவில்லை. 
 

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இதுபோன்ற விசயங்கள் நிறைய நடக்கிறதா?
 

ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருக்கும்போது, நாங்கள் இங்கு அழுதுக்கொண்டிருக்கும்போது, திண்டுக்கல்லில் ரூம்போட்டு இதனை செய்திருக்கிறார். 
 

எந்த தேதியில்?
 

பிறகு சொல்கிறேன். 
 

எந்த மாதம்?
 

என்னிடம் ரசீது உள்ளது. தேர்தல் நேரத்தில்தான் இது நடந்திருக்கிறது. 
 

மீடூ விவகாரம் தலைதூக்கும் நேரத்தில் ஜெயக்குமார் பதவி விலக வேண்டும் என்று குரல் எழுமா?


யார் யாரையோ ஏன் துணைக்கு இழுக்க வேண்டும். பதவி விலக வேண்டும் என்று நானே கோரிக்கை வைக்கிறேன்.
 

ஜெயக்குமாருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவீர்களா?
 

தேவைப்பட்டால், அந்த குழந்தைக்கும், பெண்ணுக்கும், அந்த குடும்பத்திற்கோ ஏதேனும் ஏற்பட்டால் போராட்டம் நடத்துவோம். 
 

சசிகலா, தினகரன் இதற்கு பின்னால் இருப்பதாக ஜெயக்குமார் சொல்ல காரணம் என்ன?
 

என்னை குறிவைத்து விட்டு அவர்களை சொல்கிறார். பதட்டம். 82ல் ஜெயலலிதா இவரை அறிமுகப்படுத்தியதாக சொல்கிறார். அதில் உண்மை இருக்கிறதா. 82ல்தான் ஜெயலலிதாவே அரசியலில் எம்ஜிஆரால் அறிமுகப்படுத்தப்பட்டார். 91ல் தான் இவர் தேர்தலில் வந்தாக எனக்கு ஞாபகம். பதட்டத்தில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசுகிறார். தொகுதியில் உள்ள பெண்கள் இனிமேல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 
 

இன்னும் பல பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருக்கிறதா?
 

இருக்கிறது. 
 

பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் நீங்கள் நீதிமன்றத்தில் புகார் கொடுக்கலாமே?
 

அவர்கள் சார்பில் நான் புகார் கொடுத்தால் எடுத்துக்கொள்வார்களா என்று சொல்ல முடியாது. யார் பாதிக்கப்பட்டார்களோ அவர்கள் புகார் கொடுக்க வேண்டும். 

அமைச்சரிடம் உதவிக்கேட்டு போன பெண்ணை கர்ப்பமாக்கிட்டார் என்று குற்றச்சாட்டு எழுகிறது. பாதிக்கப்பட்ட பெண் சார்பில் நீங்கள் புகார் கொடுத்தீர்களா?
 

பாதிக்கப்பட்ட பெண் துறைமுகம் தொகுதியைச் சேர்ந்தவர். எந்த தொகுதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் புகார் கொடுக்கலாம். நாங்கள் புகார் கொடுத்தால் கோர்ட் ஏற்றுக்கொள்ளுமா என்று தெரியவில்லை. ஆளுநர் இந்த விசயத்தில் தலையிட்டு அந்த பெண்ணையும், குழந்தையையும், குடும்பத்தையும் அமைச்சர் ஜெயக்குமாரிடம் இருந்து காப்பாற்ற வேண்டும். 
 

அமைச்சரிடம் என்ன உதவிக்காக சென்றார். திண்டுக்கல்லில் ரூம் போட்டதாக சொல்கிறீர்கள். இதை எப்படி எடுத்துக்கொள்வது?.

 
அந்த பெண்ணும், அவருடைய தாயும் ஒரு பிரச்சனைக்காக ஜெயக்குமார் அலுவலகத்தில் அவரை சந்தித்துள்ளனர். போலீஸ் அதிகாரி சம்மந்தப்பட்ட ஒரு விசயம். இரண்டு, மூன்று நாளில் கூப்பிடுவதாக சொல்லி அனுப்பியுள்ளார். பின்னர் அந்த பெண்ணை, அவரது தாயார் ஊரில் இல்லாத நேரத்தில் தொடர்புகொண்டு, போலீஸ் அதிகாரியை வரசொல்லியிருக்கிறேன், நீங்களும் வாங்க என்று சொல்லி அழைத்துள்ளார். அந்தப் பெண்ணும் நம்பி சென்றார். சென்றபோது அவரது வீட்டில் யாரும் இல்லை. ஜுஸ் ஒன்றை கொடுத்து குடிக்க சொன்னார். அந்த பெண் மயங்கிவிட, இவர் அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டார். அதன்பிறகு திருமணம் செய்வதாக கூறி பலநாள் உறவில் ஈடுபட்டுள்ளார். 

இந்த சம்பவத்தை மற்ற கட்சிகள் எதுவும் பேசவில்லையே?
 

அதற்கு நான் பொறுப்பல்ல. நான் என்ன செய்ய முடியும்?
 

அந்தப் பெண்ணை ஜெயக்குமார் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களா? தண்டனை கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?
 

அந்தப் பெண்ணை ஏற்றுக்கொண்டால் தண்டனையில் இருந்து தானாகவே வெளியே வந்துவிடுவார். 
 

ஜெயக்குமார் அந்தப் பெண்ணை மனைவியாக ஏற்றுக்கொண்டால் அந்த பெண்ணுக்கு பாதுகாப்பு இருக்கும் என்று நினைக்கிறீர்களா?
 

மனைவியாக ஏற்றுக்கொள்ளட்டும். நாமெல்லாம் எங்க போய்விடப்போகிறோம்?. அந்த குழந்தையை அவரே ஸ்கூலில் கொண்டு விடட்டும். 
 

ஜெயக்குமார் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறாரா? எப்படி என்று சொல்லுங்கள்?
 

ஆமாம். ஆமாம். ஆமாம். 
 

எப்படி என்று சொல்லுங்கள்?
 

எத்தனை தடவை சொல்லுவது.
 

பலாத்காரம் என்று சொல்கிறீர்களே?
 

முதல் தடவை அப்படித்தான் நடந்தது. அதன்பிறகு திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி பல நாள் உறவில் இருந்துள்ளார். உண்மை வரும்போது நன்றாக இருக்கும். குரல் தன்னுடையது இல்லை என்று சொல்லியிருக்கிறார். குழந்தை தன்னுடையது இல்லை என்று சொல்லட்டும். இவ்வாறு பேட்டி அளித்தார். 

 

 

 

சார்ந்த செய்திகள்