தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனத் தலைவருமான எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாள் இன்று (17-01-24) கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவை முன்னிட்டு அதிமுக கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் ஏராளமான நிகழ்வுகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உடன் இருந்தனர்.
அதனை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், துக்ளக் நிகழ்ச்சியில் பேசிய குருமூர்த்தி, ரஜினிகாந்த் அண்ணாமலையை முதலமைச்சராக ஆக்க வேண்டும் என்று விரும்பியதாக தெரிவித்தது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “இது ஒரு அறையில் பேசிய விஷயம். ரஜினிகாந்த் சபையில் தெரிவிக்கட்டும், நான் பதில் சொல்கிறேன். அண்ணாமலை தமிழகத்தில் முதலமைச்சராவது எழவு காத்த கிளி போலத் தான்” என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், “தமிழர்களின் அடையாளமாக இரண்டு விஷயம் இருக்கிறது. ஒன்று வீரம், மற்றொன்று காதல். அதை மாற்ற முடியாது. வீரம் இல்லாதவர் தமிழர் கிடையாது. அதே போல், காதல் இல்லாதவர் தமிழர் கிடையாது. எனவே, வீரத்தின் சின்னம் தான் ஜல்லிக்கட்டு விளையாட்டு. இப்போ கூட காளை மாட்டை கூட்டிட்டு வாங்க, நான் அடக்கி காட்டுறேன். அரசியலில் எத்தனையோ ஓடாத மாடுகள் இருக்கிறது. அதனிடம் நான் மோதுவதில்லை” என்று கூறினார்.