அ.தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கும் வகையில் சாத்தூரில் தொடங்கிய சைக்கிள் பேரணி ராஜபாளையம் சென்றது. இதனை தொடர்ந்து ராஜபாளையம் ஜவஹர் மைதானத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், 137 பயனாளிகளுக்கு ரூ. 82.16 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களை அமைச்சர்கள் கே.டி. ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி. உதயகுமார் வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து பேசிய கே.டி ராஜேந்திர பாலாஜி,
அ.தி.மு.கவுக்கு வீழ்ச்சி 1 சதவிகிதம் என்றால், வளர்ச்சி 99 சதவிகிதம். அ.தி.மு.க. மனிதனால் ஏற்படுத்தப்பட்டதல்ல. எம்.ஜி.ஆர் என்ற புனிதனால் தொடங்கப்பட்டது. இதை யாராலும் அழிக்க முடியாது. அம்மா சொன்னது போல் அவருக்கு பின்னாலும் அ.தி.மு.க. 100 ஆண்டுகள் ஆளும்.
மற்ற கட்சி போல உருவத்தை பார்த்து பதவி கொடுக்கப்படுவதில்லை. உழைத்தால் தான் முன்னேற முடியும். படிப்படியாக மட்டுமே முன்னேற முடியும். கட்சியில் சில குளறுபடிகள் ஏற்பட்டு விட்டது என எதிர் கட்சியினர் பொய்யான தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர். அதை உடைத்து அ.தி.மு.க. கட்சியின் சக்தியை காட்டவே இந்த ஓராண்டு சாதனை விளக்க சைக்கிள் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் என்றார்.
அமைச்சர் ஆர்.பி. உயதகுமார் பேசும்போது, தொண்டர்களின் உழைப்பை போற்றும், வணங்கும் தலைமை அ.தி.மு.க.வின் உடையது. அந்த தலைமையை அம்மா வளர்த்தெடுத்தார். தற்போது அதை மருது சகோதரர்களான ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் ஆகியோர் கட்டி காத்து வருகின்றனர்.
அண்டை மாநிலங்களில் இல்லாத எய்ம்ஸ் மருத்துவ மனை தமிழகத்தில் வர வேண்டும் என விதை விதைத்தார் அம்மா. ரூ. 2 ஆயிரம் கோடியில் அதை சத்தமில்லாமல் மருது சகோதரர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவிப்பாக பெற்று தந்துள்ளனர்.
பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான தலை நகரம் என சென்னை தேசிய விருதை பெற்றுள்ளது. இது போல மக்கள் நல்வாழ்வு துறை, விவசாய துறையில் பரிசு, பள்ளி கல்வி துறையில் மறு மலர்ச்சி போன்ற நலத்திட்டங்களை வழங்கியது அம்மாவின் அரசு.
தற்போது ஆவின் பால் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அம்மாவின் அரசின் சாதனைகளை அமெரிக்கா என்ன? நிலவு வரை எடுத்து செல்வோம். ஆனால் அங்கு சைக்கிள் செல்லாது என்றார்.