காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி இந்தியா முழுதும் சுமார் 12 மாநிலங்களில் 3,570 கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து உரையாட இருக்கிறார். இந்த பயணத்திற்கான திட்ட ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டு கன்னியாகுமரியிலிருந்து நடைபயணத்தை கடந்த புதன் அன்று ராகுல் துவங்கினார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தேசியக் கொடியை கொடுத்து இந்த யாத்திரையை தொடக்கி வைத்தார். இந்தியாவின் இறையாண்மையும் அரசியலமைப்புச் சட்டமும் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி குமரி முதல் காஷ்மீர் வரை இந்த பயணம் 150 நாட்களுக்கு மேற்கொள்ளப்பட இருக்கிறது.
அவரது கட்சியை சேர்ந்த தலைவர்கள் பலர் அவரை விமர்சித்து இந்த நடைப்பயணத்தில் பங்கேற்காமல் இருப்பது விமர்சனத்திற்கு உள்ளான போதும் கூட தொண்டர்களும் மக்களும் அவரை வழி நெடுகிலும் அவரை சந்தித்து வாழ்த்து கூறி வருகின்றனர். இருந்தும் "20 மக்களவை தொகுதிகளை கொண்ட கேரளாவில் 20 நாட்கள் நடைபயணமும்; 80 மக்களவை தொகுதிகளைக் கொண்ட உத்திரபிரதேசத்தில் 2 நாட்கள் நடைபயணம் நடைபெறுவது ஆச்சர்யம்." என கேரள பாஜக தலைவர் கூறியிருந்தார். பிரதமர் மோடியை எதிர்க்க ஆள் வேண்டும். ஆனால் அதற்கு ராகுல் ஆள் இல்லை. 50 ஆண்டுகாலம் ஆண்டு ஏற்படுத்த முடியாத ஒற்றுமையை 5 மாதம் நடந்து ஏற்படுத்த போகிறாரா என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்நிலையில் "காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் முயற்சிகளை பாராட்டுகிறேன். இந்திய ஒற்றுமை பயணம் நாட்டுக்கு நல்ல பலன்களை அளிக்கும் என நம்பிக்கை உள்ளது" என மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக் கூறியுள்ளார். மேலும் ராஜ்பாத்தின் பெயரை கர்தவ்ய பாதை என மாற்றியதையும் விமர்சித்துள்ளார்.