நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.
அந்த வகையில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் தங்க தமிழ்ச்செல்வன். அதிமுக சார்பில் நாராயணசாமி, பாஜக கூட்டணி சார்பில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் மதன் உட்பட நான்கு முனை போட்டியுடன் சுயேட்சைகளும் களமிறங்கி தேர்தல் களத்தில் வலம் வருகிறார்கள். அதே சமயம் பாஜக கூட்டணி சார்பில் களம் இறங்கியுள்ள டி.டி.வி தினகரன் தேனி தொகுதியில் பல இடங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக தமிழகத்தில் பல பகுதிகளில் டிடிவி பிரச்சாரம் செய்யப்போவதாகவும், எனது மனைவியும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்றும் சொல்லி இருந்தார்.
அதன் அடிப்படையில் தான் டிடிவி தினகரன் மனைவி அனுராதா தனது கணவருக்காக தேனி பாராளுமன்ற தொகுதியில் உள்ள பல பகுதிகளில் தேர்தல் களத்தில் வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அதன்படி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அவரது மனைவி அனுராதா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, “குக்கர் சின்னத்தை எல்லோரிடத்திலும் கொண்டு செல்லுங்கள். சின்னத்தில் குழப்பம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மற்றவருக்கும் சின்னத்தை எடுத்து சொல்லுங்கள். ஏனென்றால் இதற்கு முன் போட்டியிட்டபோது வேறொரு சின்னத்தில் டிடிவி தினகரன் போட்டியிட்டதால் இதை சொல்கிறேன். குக்கர் மாதிரிதானே அவருடைய முகமும் குண்டா இருக்கு”என கலகலப்பாக பேசி வாக்கு சேகரித்தார்.