அதிமுக இன்று தமிழ்நாடு முழுவதும் மின் கட்டண உயர்வைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதன்படி, திருச்சி மாநகர மாவட்ட அதிமுக சார்பில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக அவை தலைவர், மலைக்கோட்டை ஐயப்பன் தலைமையில், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர், முன்னாள் துணை மேயர் சீனிவாசன், மாவட்ட மாணவரணி செயலாளர், ஆவின் தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் எம்.பி ரத்தினவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதில் பேசிய ரத்தினவேல், “அதிமுக ஆட்சியில் 100 யூனிட் மின்சாரம் இலவசம் அறிவித்து செயல்படுத்தியவர் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா. மின்சாரத்திற்கும், திமுகவிற்கும் நெருங்கிய பந்தம் இருக்கிறது. எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் மின்வெட்டு வந்து விடுகிறது. இந்த நிலைமைகள் எல்லாம் மாற வேண்டும் என்று சொன்னால் மீண்டும் அதிமுக ஆட்சி பீடத்திற்கு வர வேண்டும். அப்படி ஆட்சி பீடத்திற்கு வர வேண்டும் என்று சொன்னால் திமுக அரசு அகற்றப்பட வேண்டும்.
மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால்தான், மக்கள் திட்டங்கள் செயல்படும். ஆனால், திமுக ஆட்சியில் ரூ.250 மின் கட்டணம் ரூ.750 வரை உயர்ந்துள்ளது. நீட் தேர்வு ரத்து சூட்சமம் தெரியும் என்றார் ஸ்டாலின். ஆனால், ஆட்சிக்கு வந்து ஒன்றரை காண்டு காலம் ஆகியும் நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை. டீசல், பெட்ரோல் விலை உயர்வு, மாநில வரி ஏறாது என்றார். ஆனால், ஆட்சி பொறுப்பேற்றதும் அனைத்திலும் ஏமாற்றம். வீட்டு வரி உயர்வு முதல், பல்வேறு வரி உயர்வு இப்படி பல்வேறு இன்னல்களையும், தொல்லைகளையும் கொடுக்கும் திமுக அரசு வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும்” என்றார்.