அதிமுக ஓபிஎஸ், ஈபிஎஸ் என இரண்டு அணிகளாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இருதரப்பினரும் தாங்கள்தான் உண்மையான அதிமுக என்று உரிமை கொண்டாடி வருகிறார்கள். இதில் ஈபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் கட்சிப் பொதுக் கூட்டங்கள் கூட்டுவது, அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் செய்வது எனத் தொடர்ந்து செயல்பட்டு வரும் நிலையில், ஓபிஎஸ் தரப்பு அமைதியாகவே இருந்து வந்தது.
இந்நிலையில், இன்று (டிச.21) மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று கடந்த சனிக்கிழமை ஓபிஎஸ் தரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதற்கான முன்னேற்பாடாக நேற்று ஓபிஎஸ் அதிமுகவின் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அதன் பின் இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமைத் தாங்கினார். ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மனோஜ் தங்கபாண்டியன், "ஒற்றைத் தலைமை வேண்டாம், சட்டச்சிக்கல் வரும் என்று அன்றே சொன்னேன். ஆனால், அதையெல்லாம் கேட்காமல் கட்சியை இப்படி இக்கட்டான சூழலுக்குத் தள்ளியவர் எடப்பாடி பழனிசாமி. அ.தி.மு.க.விற்கு பிடித்துள்ள நோய் பழனிசாமி. அதற்கான மருந்துதான் ஓ.பி.எஸ். எந்த நிலையிலும் கழகத்திற்குள் பிளவு ஏற்படக்கூடாது என ஓபிஎஸ் 5 ஆண்டுகள் ஒத்துழைப்பு கொடுத்தார். ஆனால், அதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு கழகத்தில் இருந்து விலகிவிடுங்கள் எனச் சொல்கிறார்கள்.
அதிமுகவை பாதுகாக்கக் கூடியவர் ஓபிஎஸ் மட்டும் தான். பழனிசாமியிடம் இருப்பவர்கள் டெண்டர் படை. ஓபிஎஸ் உடன் இருப்பவர்கள் தொண்டர் படை. உங்களுடன் இருந்தவர்கள் 10 ஆண்டுக்காலம் சம்பாதித்தவர்கள். ஆனால், எங்களோடு இருப்பவர்கள் எதையும் எதிர்பார்க்காதவர்கள். எனக்கு ஒரு ஆசை... அண்ணன் ஓ.பி.எஸ். ஆட்சிக்கு வந்த பிறகு, கூவத்தூரில் என்ன நடந்தது என விசாரிக்க தனி கமிஷன் அமைக்க வேண்டும். விசாரித்து அனைவரையும் கைது செய்ய வேண்டும்" எனக் கூறினார்.