
தருமபுரம் ஆதீன குரு மகா சந்நிதானத்தின் ஞானரத யாத்திரையைத் துவக்கி வைக்க மயிலாடுதுறைக்கு வருகை தந்த தமிழக ஆளுநருக்கு விசிக, திராவிடர் கழகம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கருப்புக்கொடி காட்டினர். அப்போது ஆளுநரின் பாதுகாப்பிற்காக வந்த வாகனங்களின் குறுக்கே கருப்புக்கொடியை எரிந்தும் தங்களது எதிர்ப்பை போராட்டக்காரர்கள் வெளிப்படுத்தினர்.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி விஸ்வேஷ் பி.சாஸ்திரி தமிழக டிஜிபிக்கு பரபரப்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில், மன்னம்பந்தல் என்ற இடத்தில் கூடியிருந்தவர்கள் கருப்புகொடிகளை ஏந்தி ஆளுநருக்கு எதிராக முழக்கம் எழுப்பியதாகவும் , ஆளுநரின் பாதுகாப்பு வாகனங்கள் வந்தபோது காவல்துறையின் பாதுகாப்பை மீறி அவர்கள் முன்னேற முற்பட்டதாகவும், பாதுகாப்பு வாகனங்கள் மீது கொடிகள், கொடிக்கம்புகள் வீசப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 124ன்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.