ஆளுநரின் செயல்பாட்டால் மதுரை காமராசர் பல்கலைக்கழக 54 வது பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க போவதாக தமிழக தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசுகையில், ''பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்யும் பொழுது உயர்கல்வித்துறை செயலாளர் மற்றும் இணை வேந்தர் என்ற முறையில் எங்களுடன் பேசி, யாரை சிறப்பு விருந்தினராக போடலாம் என கலந்தாலோசிக்க வேண்டும். பட்டமளிப்பு விழாக்களில் முதலில் வேந்தர் அதன் பிறகு இணை வேந்தர் அதன் பிறகு ஒரு சிறப்பு விருந்தினர் என்ற ஒருவரை போடுவார்கள். கௌரவ விருந்தினர் என்று போட மாட்டார்கள். ஆனால் இதில் கௌரவ விருந்தினர் என்று ஒருத்தரை போட்டு மத்தியில் இருக்கக்கூடிய அமைச்சர் எல்.முருகன் பெயரை போட்டுள்ளார்கள். அவர் கல்வித்துறை சார்ந்த அமைச்சரும் இல்லை, அவர் ஒரு துணை அமைச்சர். பட்டமளிப்பு விழாவில் கௌரவ விருந்தினர் என்று போட வேண்டிய அவசியம் இல்லை. அப்பொழுது இதில் நோக்கம் என்ன? ஆளுநருடைய நோக்கம் என்ன? அவர் அரசியலை பல்கலைக்கழகங்களில் புகுத்துவதற்காக பட்டமளிப்பு விழாக்களை பயன்படுத்துகிறார் என நாங்கள் கருதுகிற காரணத்தினால் இந்த பட்டமளிப்பு விழாவை நான் புறக்கணிக்கிறேன்.
மாணவர்கள் அரசியலை தெரிந்துகொள்ள வேண்டும் ஆனால் சேற்றில் அடித்த பந்தாக மாணவர்கள் மாறிவிடக்கூடாது. சுவற்றில் அடித்த பந்தாக இருக்க வேண்டும். மாணவர்கள் அரசியல் தெரிந்து கொள்ளக் கூடாது என்று சொல்லவில்லை. பட்டமளிப்பு விழாவில் அரசியலை பேசாதீர்கள் என்று தான் சொல்கிறோம். ஒரு கட்சி சார்பாக பேசக்கூடாது. மாணவர்களின் எதிர்காலத்தைப் பற்றி, அவர்களுடைய வளர்ச்சியைப் பற்றி பேசுவதற்கு தான் ஒரு பட்டமளிப்பு விழா இருக்க வேண்டுமே தவிர இதுபோன்ற நிகழ்வுகளுக்காக இருக்கக் கூடாது.
துணைவேந்தர்களை ஆளுநர் நியமிக்கிறார் அதனால் அவர் இஷ்டத்திற்கு யாரை வேண்டுமானாலும் நியமிக்கிறார். இனி துணைவேந்தர்களை அரசுதான் நியமிக்க வேண்டும் என்றுதான் சட்டமன்றத்திலேயே தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பி வைத்திருக்கிறோம். எல்.முருகனை பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளக் கூடாது என்று நான் சொல்லவில்லை. கௌரவ விருந்தினர் என்று போட்டு ஏன் கலந்து கொள்ள வேண்டும். இணைவேந்தராக இருக்கக்கூடிய எனக்கு மேலாகவா அவர் இருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் ஒரு புரோட்டோகால் இருக்கு.
சிறப்பு விருந்தினர் என்று ஒருவரை தான் அழைப்பார்கள் இதில் இரண்டு பெயர் போட்டுள்ளது. பலராமன் என்பவர் சிறப்பு விருந்தினர் அவரும் பேசுகிறார். அதற்கு அடுத்து கௌரவ விருந்தினர் என எல்.முருகன் பேசுகிறார். நான் கடந்த முறை உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொழுது நாங்களே சென்று பட்டமளிப்பு விழாக்களை நடத்தியதுண்டு. பட்டமளிப்பு விழா என்பதற்கும் ஆளுநருக்கும் சம்பந்தம் கிடையாது. அந்த பல்கலைக்கழகத்தை நடத்துகிற துணை வேந்தருக்குத்தான் அந்த அதிகாரம். பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தான் அந்த அதிகாரம். இவர் போனால் அங்குள்ள ஆசிரியர்களை கூப்பிட்டு பேசுவது, புதிய கல்விக் கொள்கை பற்றி பேசுவது இதெல்லாம் தவறான செய்திகள் என்ற காரணத்தை அவர்களுக்கு வலியுறுத்துவதற்காக தான் இந்த பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிக்கிறேன்'' என்றார்.