பாஜகவின் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவராக காயத்ரி ரகுராம் செயல்பட்டு வந்த நிலையில், கடந்த டிசம்பரில் அவர் அந்த பொறுப்பிலிருந்து 6 மாதங்களுக்கு நீக்கப்படுவதாகத் தமிழக பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும் கட்சியின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும் தொடர்ச்சியாகச் செயல்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பாஜகவிலிருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “நான் என்ன தவறு செய்தேன் என என்னை அழைத்துச் சொல்லுங்கள். இடைநீக்கம் குறித்த கடிதத்தில் கட்சிக்குக் களங்கம் உண்டாக்கினேன் எனக் கூறியிருந்தனர். என்ன செய்தேன் எனச் சொன்னால்தானே தெரியும். இதனால்தான் உங்களை இடைநீக்கம் செய்தேன் என ஆதாரத்துடன் காட்டினால் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அண்ணாமலை ஆதாரங்கள் இல்லாமல்தான் எப்பொழுதும் பேசுவார். அதுதான் உண்மை” எனக் கூறியிருந்தார்.
கடந்த சில தினங்கள் முன், ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நேரடியாக காயத்ரி ரகுராம் சவால் விடுத்திருந்தார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பதிவில், “ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிடச் சவால் விடுகிறேன். நான் உங்களை எதிர்த்து நிற்பேன் எனச் சவால் விடுகிறேன். உங்கள் நாடகம் மற்றும் போலி விளம்பரங்கள் டெல்லியில் வெளிவரட்டும். சவாலை ஏற்றுக்கொள்வீர்களா? நான் தோற்றால் 5 நிமிடத்தில் நீங்கள் முதல்வராகி ஆட்சியை மாற்றலாம். நான் தமிழ்நாட்டின் மகள். நீங்கள் தமிழகத்தின் மகன். தமிழகமா அல்லது தமிழ்நாடா என்று பார்ப்போம்” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், அண்ணாமலை அடியாளை அனுப்புகிறார் என்ற குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியதாவது, “அண்ணாமலைக்கு இப்போது என்னுடன் பேச தைரியம் இல்லை. ராஜினாமா செய்த அடியாளை அனுப்புகிறார். ஈரோடு இடைத்தேர்தலில் எனக்கு எதிராக அவர் போட்டியிட முடியுமா அல்லது முடியாதா என்று கேளு. இது ஆம் அல்லது இல்லை என்ற கேள்வி. விவாதிக்க எதுவும் இல்லை. இது காரியகர்த்தாவை சீர்படுத்துதல் என்று அழைக்கப்படுகிறது. இப்படித்தான் அண்ணாமலை தேசிய அரசியல் கட்சியில் காரியகர்த்தாவை கட்சிக்குப் பயனுள்ளதாக மாற்றுவதற்குப் பதிலாக தனது சுயநலத்திற்காக ஒரு காரியகர்த்தாவை அடியாளாக மாற்றுகிறார்” எனக் குற்றம் சாட்டியுள்ளார்.