பனிக்காலத்தின் கடுங்குளிரை விரட்டியடித்து தமிழக அரசியல் களத்தை வெப்பச்சலனமாக சூடாக்கிவிட்டது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு. இத்தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸின் திருமகன் ஈவேரா அண்மையில் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். அதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
ஜனவரி 4 ஆம் தேதி தான் இத்தொகுதியின் எம்எல்ஏவான திருமகன் இறந்தார். இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிக்க ஓரிரு மாதங்களாகும் என அரசியல் கட்சிகள் காத்திருக்க, அவர் இறந்த அடுத்த 14 நாட்களிலேயே அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது அரசியல் களத்தை அதிர வைத்துள்ளது. ஜனவரி 31 இல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கி, பிப்ரவரி 7 நிறைவடைகிறது. வாக்குப்பதிவு பிப்ரவரி 27 என்றும், வாக்கு எண்ணிக்கை மார்ச் 2 ஆம் தேதி எனவும் தேர்தல் அறிவிப்பு வந்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் தற்போது 2 லட்சத்து 26 ஆயிரத்து 876 வாக்காளர்கள் உள்ளார்கள். இதில் ஆண்கள் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 713 பேர், பெண்கள் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 140 பேர். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் எண்ணிக்கை இரண்டு லட்சமாக இருந்தது. அப்போது தேர்தலில் மொத்தம் ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 37 பேர் என 70 சதவீத வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் கூட்டணிக்கட்சியை களமிறக்க அதிமுக ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த முறை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இரட்டைஇலை சின்னத்திலேயே போட்டியிட்டது. இந்நிலையில், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதில் இம்முறையும் ஈரோடு கிழக்கு தொகுதியை தமாகாவிற்கு ஒதுக்க வேண்டும் எனக் கேட்டதாகச் சொல்லப்படுகிறது.
ஆனால், அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப்பூசல் காரணமாக இரட்டைஇலை சின்னத்தைப் பெற ஓபிஎஸ் கையெழுத்து அவசியம் என்பதால் அதிமுக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடும் நிர்பந்தம் ஏற்படலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் இருதரப்பும் யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.