Skip to main content

“அமைச்சர்கள் கவனிக்க வேண்டிய துறைகளை துணை முதல்வர் ஒருவரே கவனிக்கிறார்” - இபிஎஸ் குற்றச்சாட்டு

Published on 17/10/2024 | Edited on 17/10/2024
 EPS alleges Deputy Chief Minister udhayanidhi stalin

அதிமுகவின் 53வது ஆண்டு துவக்க விழாவை, தமிழகம் முழுவதும் அதிமுகவினரால் இன்று (17-10-11) கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்குச் சென்று அங்குள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

இதனை தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “பெரிதாக மழை பெய்யாததால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கவில்லை. ஒருவேளை தொடர்ந்து மழை பெய்திருந்தால் நம்மால் வெளியே சென்றிருக்க முடியாது. பல்வேறு அமைச்சர்கள் கவனிக்க வேண்டிய துறைகளை துணை முதல்வர் ஒருவரே கவனிக்கிறார். அனுபவம் வாய்ந்த அமைச்சர்களுக்கு பதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மட்டுமே வேலை செய்கிறார். வெள்ளை அறிக்கை கேட்டால் முதிர்ச்சியில்லாமல் பதில் அளிக்கிறார் உதயநிதி ஸ்டாலின். எதிர்கட்சி வெள்ளை அறிக்கை கேட்டால் அதை தருவது அரசின் கடமை. அதை தட்டிக்கழிக்கக்கூடாது. வெள்ளப் பாதிப்புகளை தடுக்க திருப்புகழ் கமிட்டி கொடுத்த பரிந்துரை அறிக்கை என்னவானது?. 

சென்னையில் வெள்ளப் பாதிப்புகளை தடுக்க தமிழக அரசு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? வெறும் மழைக்கே இந்த அரசு அலறுகிறது. ஆனால், அதிமுக அரசு பல புயல்களை சந்தித்து புயல் வேகத்தில் பணியாற்றி மக்களுடைய பிரச்சனைகளை தீர்த்தது. அதிமுக அரசாங்கத்தை குறை கூறுவதற்கு எவருக்கும் தகுதி கிடையாது. சென்னையில் ஓரளவு பெய்த மழைக்கே மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கொரோனா காலத்தில் தனது உயிரையும் துட்சமென நினைத்து தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் பலரையும் வேலையில் இருந்து நிறுத்திவிட்டார்கள். பல பேரை வயிற்றில் அடித்த அரசாங்கம் தான் இந்த தி.மு.க அரசாங்கம். தூய்மை பணியாளர்களின் வாழ்வை கேள்விக்குறியாக்கிவிட்டார்கள். அதிமுக பிரிந்துவிட்டது என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம். அதிமுக பிரிக்கப்படவில்லை. அவர்கள் எல்லாம் நீக்கப்பட்டவர்கள். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை இனி மீண்டும் சேர்க்க வாய்ப்பே இல்லை” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்