Skip to main content

எம்.எல்.ஏ.க்களிடம் தனித்தனியே பேசிய ஈ.பி.எஸ். - அதிர்ச்சியில் ஓ.பி.எஸ். டீம்...

Published on 11/06/2019 | Edited on 11/06/2019


 

நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக படுதோல்வி ஏற்பட்டதற்கு கட்சியில் உள்ள இரட்டை தலைமை தான் காரணம் என்றும், மக்கள் ஏற்றுக்கொள்ளும் ஒரு தலைமையின் கீழ் அதிமுக கட்சி செயல்பட வேண்டும் என்று அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா இரண்டு நாட்களுக்கு முன் பகிரங்கமாக பேட்டி அளித்தார். இவரது கருத்துக்கு குன்னம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ராமச்சந்திரனும் ஆதரவு தெரிவித்தார். 


  ops - eps



இந்த சூழ்நிலையில் அதிமுக நிர்வாகத்திற்கு எதிராக பொதுவெளியில் யாரும் பேச வேண்டாம் என்று கட்சியின் தலைமை திடீர் கட்டுப்பாடு விதித்துள்ளது. மேலும், தேர்தலில் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி, உள்கட்சி பிரச்னைகள் குறித்து விவாதிக்க நாளை (12ம் தேதி) அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், கட்சி முன்னணி நிர்வாகிகள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று ஓபிஎஸ்-இபிஎஸ் ஆகியோர் கூட்டாக அறிவித்தனர்.
 

ஒரு தலைமைதான் வேண்டும் என்று திடீரென குரல் எழுவதற்கு என்ன காரணம் என்று அதிமுகவில் விசாரித்தபோது, ராஜன் செல்லப்பா எடப்பாடி ஆதரவாளர். ராஜன் செல்லப்பாவின் கருத்துக்கு ஆதரவு அளித்து பேசிய குன்னம் ராமச்சந்திரன், வைத்திலிங்கத்தின் ஆதரவாளர். ஆகையால் ஏற்கனவே எடப்பாடியின் ஆலோசனையின் பேரில்தான் ராஜன் செல்லப்பா இப்படி பேசியிருக்கிறார். 
 

ராஜன் செல்லப்பா பேசியதையடுத்து சென்னையில் 12ஆம் தேதி ஆலோசனை கூட்டம் கூட்டப்படும் என்று அறிவித்துள்ளனர். அதற்குள் எடப்பாடி பழனிசாமி, அனைத்து எம்எல்ஏக்களையும் தனித்தனியாக தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, தேர்தல் தோல்வி பற்றி கூட்டத்தில் எதுவும் பேச வேண்டாம். அதிமுக பொதுக்குழுவில் ஒற்றை தலைமை தான் வேண்டும். ஜெயலலிதா முதல்வர் பதவி மற்றும் பொதுச்செயலாளர் பதவி என இரண்டையும் சேர்த்து வகித்து வந்தார். அதனால் கட்சி கட்டுக்கோப்பாக இருந்தது. அதே போன்று முதல்வர் தலைமையில் கட்சி செயல்பட்டால்தான், வரும் நாட்களில் அதிமுகவை சிறப்பாக வளர்க்க முடியும் என்று வலியுறுத்தி பேச வேண்டும் என்று எடப்பாடி கூறியுள்ளாராம். இதைத்தொடர்ந்து அதிமுக பொதுக்குழுவை கூட்டி, கட்சி தலைமை பதவியையும் தனக்கு கிடைக்கும் வகையில் செய்துவிடலாம் என்று எடப்பாடி செயல்பட்டு வருவதாக தெரிவித்தனர். இதனை அறிந்த ஓ.பன்னீர்செல்வம் அணியினம் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனராம். எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு எதிராக பேசவும் தயாராகி வருகிறார்களாம். 


 

2019ம் ஆண்டு ஜூன் 30ம் தேதிக்குள் அதிமுக கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டு, தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறப்பட்டு இருந்தது. பொதுச்செயலாளர் பதவிக்கு பதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என பதவி ஏற்படுத்தப்பட்டது அதிமுக பைலாவுக்கு எதிரானது என்று அதிமுக முன்னாள் எம்.பி.யான கே.சி. பழனிசாமி டெல்லி ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு ஜீலையில் வர உள்ளதாலும், முன்கூட்டியே இதுபோன்ற நகர்வுகளை எடப்பாடி பழனிசாமி எடுத்து வருகிறாராம். 

 


 

சார்ந்த செய்திகள்