Skip to main content

''இந்தியாவை சீரழிக்கத்தான் திராவிட மாடலா?'' -பா.ஜ.க.ராதாகிருஷ்ணன் பேச்சு

Published on 03/05/2022 | Edited on 03/05/2022

 

Dravidian model to ruin India? -BJP Radhakrishnan Speech

 

இலங்கையிடம் உள்ள கச்சத்தீவை மீட்பதில் இந்திய அரசு மிகவும் உறுதியாக உள்ளதாகவும், கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பதே பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைய எனவும் பா.ஜ.க முன்னாள் எம்பி கோவை சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

 

நேற்று ஈரோடு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர்,பேசும்பொழுது, "தமிழக நிதி அமைச்சர் மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை என மத்திய அரசு மீது குற்றம்சாட்டி வருகிறார். ஆனால் மத்திய அரசுக்கு மாநில அரசு சார்பில் வழங்கப்படும் நிலக்கரி, மின்சாரம் போன்றவைகளுக்கு எவ்வளவு இவர்கள் பாக்கி வைத்து உள்ளார்கள் என்பதையும் அவர் தெளிவுபடுத்த வேண்டும். இதுகுறித்த வெள்ளை அறிக்கையை அவர்கள் வெளியிட வேண்டும். அதேபோன்று ஜி.எஸ்.டி. வருவாயில் எல்லா மாநில அரசுக்கும் தர வேண்டியதை மத்திய அரசு முறைப்படி தான் வழங்கி வருகிறது. தி.மு.க. அரசு 'திராவிட மாடல்' எனக்கூறி தமிழர்களை சீரழித்துள்ளார்கள். அதேபோன்று இந்தியா முழுதும் சீரழிக்க தான் இந்தியா முழுவதும் 'திராவிட மாடல்' பரவுகிறது என்று கூறுகிறார்கள்.

 

தமிழகம் முன்னேறிய மாநிலமாக இருப்பதற்குக் காரணம் முந்தைய பிரிட்டிஷ் அரசால் கட்டப்பட்ட பல்வேறு அணைகள், பிறகு காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட அணைகள்தான் காரணம். ஆனால் காமராஜர் போன்ற தலைவர்களை இவர்கள் எவ்வளவு இழிவாகப் பேசினார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். தற்போது அவர் மறைந்த பிறகு அவர்களையும் தங்களது திராவிட மாடலுக்கு ஒரு ரோலாக சேர்த்துக் கொள்கிறார்கள். பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை தாய்த் தமிழை மிக உயர்வாக மதிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி சமஸ்கிருதத்தைக் காட்டிலும் தமிழ்மொழி உயர்ந்தது எனக் கூறியுள்ளார். எனவே ஹிந்தியும் சமஸ்கிருதத்தையும் மத்திய அரசு புகுத்துகிறது எனக் கூறுவது தவறானதாகும். ராகுல் காந்தி அரசியல் முதிர்ச்சியற்றவர். அதனால்தான் அவர் மோடி அரசு நாட்டை சீரழித்து விட்டது என கூறுகிறார். ஆனால் இன்று உலக வல்லரசுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜெர்மனி போன்ற நாடுகள் இந்தியாவை உயர்வாகக் கருதுகின்றன. மிகப் பெரிய பொருளாதார வல்லரசாக இந்தியா உருமாறிக் கொண்டிருக்கிறது.

 

பஞ்சு விலை உயர்ந்ததால் நூல் விலை உயர்ந்தது . பஞ்சு விலை கட்டுப்படுத்த இறக்குமதி வரியை மத்திய அரசு நீக்கியுள்ளது. இன்னும் 45 நாட்களுக்குள் இறக்குமதிகள் துவங்கும். பஞ்சு விலை குறைந்து நூல் விலையும் குறையும். அப்போது ஜவுளித் தொழில் நெருக்கடி தீரும். திமுக ஆட்சிக்கு வந்தாலே மின்வெட்டு, சிமெண்ட் விலை கடும் உயர்வு, கேரளாவுக்கு அரிசி கடத்தல், காவல்துறையில் அரசியல் தலையீடு துவங்கிவிடும். இப்போது காவல்துறை திமுக அரசின் ஏவல் துறையாக மாறியுள்ளது. மத்திய அரசைத் தொடர்ந்து குறை கூறிக்கொண்டிருக்காமல் தமிழகத்தின் தொழில், வேளாண்மை முன்னேற்றத்திற்கு திமுக அரசு பாடுபடவேண்டும். மற்ற மாநிலங்களில் தொழில்துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. பாரதிய ஜனதா கட்சி தேர்தல் விதிகளில் ஒருவர் இரண்டு முறைக்கு மேல் ஒரு பதவியில் இருக்க முடியாது .அதன்படிதான் தேர்தல் நடைபெற்று புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு ஏற்கனவே இருந்த நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். இது வாரிசு அடிப்படையில் வருவதல்ல. பாரதிய ஜனதா கட்சி ஒரு கட்டுக்கோப்பான கட்சி என்பதை இந்த உட்கட்சி தேர்தல் மூலம் நாங்கள் மீண்டும் நிரூபித்துள்ளோம்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்