மத்திய மாநில அரசுகளை கண்டித்து முதலில் மத்திய மண்டலத்தின் சார்பாக ஸ்டாலின் கலந்து கொள்ளும் ஆர்ப்பாட்டம். இதில் கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி போன்ற மாவட்டங்கள் இணைத்து நடத்தப்போவதாக பேசிக்கொண்டனர். பிறகு அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் சார்பாக மட்டுமே நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இதன்படி பெரம்பலூருக்கும், அரியலூருக்கும் இடையே ஒதியம் என்ற இடத்தில் பிரமாண்டமான மேடை கோட்டை முகப்பில் போடப்பட்டு 8ஆம் தேதி மாலை 3 மணி அளவில் கண்டன கூட்டம் என்று அறிவித்தனர்.
இதற்காக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா ஆலோசனைப்படி மா.செ.க்கள் ராசேந்திரன், சிவசங்கர் பரபரப்போடு செயல்பட வேப்பூர் ஒ.செ.க்கள் ராசேந்திரன், மதியழகன் போன்றவர்கள் களமிறக்கப்பட்டனர்.
ஒரு வாரமாகவே, பரபரப்போடு செயல்பட்டனர் திமுகவினர். ஆ.ராசா ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்தபோது கட்சி பணிகளில் சுணக்கமாக இருந்தார். அதில் வெற்றி பெற்ற பிறகு இப்போது பரபரப்போடு சுற்றி வருகிறார். கலைஞருடன் நெருக்கமாக இருந்தவர். அந்த நெருக்கம் ஸ்டாலினிடமும் உள்ளது என்பதை காட்டவும், ஸ்டாலின் தலைவரான பிறகு இப்பகுதியில் நடக்கும் முதல் நிகழ்ச்சி என்பதால் பிரமாண்ட படுத்தினார்கள்.
மழை ஒரு பக்கம் மிரட்ட கூட்டம் நடக்குமா? மக்கள் வருவார்களா? என்று பலரும் குழம்பிய நிலையில மதியம் 2 மணி இருந்தே தொண்டர்கள் கூட்டம் வாகனங்களில் திரண்டு வந்தனர். மாலை 5 மணியளவில் 5 ஆயிரத்திற்கும் குறையாத மக்கள் கூட்டம் திரண்டிருந்தது. மதியம் ஒரு மணி அளவில் பெரம்பலூர் வந்துவிட்ட ஸ்டாலின், கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளை சந்தித்துப் பேசினார்.
மாலை சரியாக 5 மணிக்கு அதிர்வேட்டுகள் முழங்க ஸ்டாலின் மேடை ஏறினார். சிவசங்கர் வரவேற்புரை ஆற்றினார். ஆ.ராசா, நேரு ஆகியோர் மட்டுமே ஐந்து நிமிடம் பேசினர்.
பின்னர் மைக்கை பிடித்த ஸ்டாலின், மாவட்டத்தில் கட்சி வளர்ச்சிக்கு பாடுபட்ட முன்னோடிகளான முன்னாள் எம்எல்ஏக்கள் திருமானூர் ராமசாமி, அரியலூர் ஆறுமுகம், ஜே.எஸ். ராசு, க.சொ.கணேசன் ஆகியோரையும், அடுத்து உடல்நிலை பாதிப்பால் ஓய்வெடுக்கும் ஆண்டிமடம் சிவசுப்பிரமணியன், வேப்பந்தட்டை செல்லமுத்து, மறைந்த பேச்சாளர் வெற்றிகொண்டான் ஆகியோரின் பணிகளை பாராட்டி பேசினார்.
இன்று மக்கள் மறக்க முடியாத நாள். ஆம். மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று 120 கோடி இந்திய மக்களையும் முட்டாளாக்கிய நாள். இதற்காக சொல்லப்பட்ட காரணங்கள் ஊழல், கள்ளநோட்டு, கருப்பு பணம், தீவிரவாதம் எல்லாம் ஒழியும் என்றார் மோடி. ஒழிந்ததா? அயல்நாட்டில் பதுக்கியுள்ள பணத்தை கொண்டு வந்து ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் ரூபாய் போடப்போவதாக சொன்னாரே, 15 ரூபாயாவது போட்டாரா? வங்கி கணக்கில் இல்லையே.
வெளிநாடு வாழ் இந்தியர் என்று கேள்விப்படுகிறோம். வெளிநாடு வாழ் பிரதமரை கேள்விப்பட்டதுண்டா? அவர்தான் மோடி. 84 நாடுகளுக்கு பயணம். இதற்கு 1486 கோடி ரூபாய் அரசு பணம் செலவிடப்பட்டுள்ளது. சிபிஐ, ரிசர்வ் வங்கி, உச்சநீதிமன்றம் வரை பிரச்சனையை உருவாக்கியுள்ளது மத்திய அரசு. இதுதான் அவர்கள் சாதனை.
ஒரு ஊரில் ஒருவன், 365 நாளில் பெரிய மலையை தூக்கி காட்டுகிறேன் என்று சொல்ல, ஊர் மக்கள் அவன் மலையை தூக்கும் அளவிற்கு தெம்பூட்டுவதற்காக, வகை வகையான உணவுகளை சமைத்து போட்டார்கள். 365வது நாள் மக்கள் மலையை தூக்கி காட்ட சொல்ல, நீங்கள் எல்லோரும் என் கையில் தூக்கி வையுங்கள் நான் அதை தாங்கி கொள்கிறேன் என்றானாம். அப்படிதான் மத்திய அரசின் திட்டங்கள் எல்லாம் ஏமாற்றத்தில் உள்ளது.
அப்படிப்பட்ட மத்திய அரசுக்கு சேவகம் செய்யும் அடிமை அரசாக உள்ளது தமிழக அரசு. நாங்கள் செய்யும் ஊழலை கண்டு கொள்ளாதீர்கள், நீங்கள் சொல்வதை எல்லாம் நாங்கள் செய்கிறோம் என்று ஏவல் அரசாக உள்ளது. நெடுஞ்சாலை துறையில் ஊழல் என்று வழக்கு போட்டோம். சிபிஐ விசாரணை வந்தது. உச்சநீதிமன்றத்திற்கு போயுள்ளனர். ,
இப்போது சொல்கிறார் எடப்பாடி, மடியில் கணமில்லை, வழியில் பயமில்லை என்று. பயமிருப்பதால்தானே உச்சநீதிமன்றத்திற்கு போயுள்ளார். திருடர்கள் கூட பயப்படுவார்கள். எங்கே திருடும்போது மாட்டிக்கொள்வோமோ என்று. ஆனால் இவர்கள் பயமே இல்லாமல் திருடுகிறார்கள். இதற்கு மத்திய அரசும் துணை போகிறது.
எனவேதான் இந்த இரண்டு அரசுகளையும் அப்புறப்படுத்த வேண்டும். அது உங்களால் மட்டுமே முடியும். அதற்கு எடுத்துக்காட்டாகத்தான் இங்கே கூடியிருக்கிறீர்கள். மோடி யாருக்கும் தனிப்பட்ட விரோதியல்ல. மத்திய பாஜக அரசுன் ஏமாற்றி வேலைக்கு முடிவு கட்டத்தான் இன்றைக்கு பல மாநில தலைவர்கள் ஒன்று சேர்ந்து வருகிறார்கள்.
நாளை (வெள்ளிக்கிழமை) சந்திரபாபு நாயுடு சென்னைக்கு என்னை சந்திக்க வருகிறார். அப்போது கூட மாநில சுயாட்சி கொள்கைகளை மத்திய அரசிடம் விட்டுத்தர கூடாது என்ற கருத்தை வலியுறுத்தப்போகிறேன் என்று தனது 50 நிமிட பேச்சில் மோடி அரசையும், எடப்பாடி அரசையும் வெளுத்து வாங்கிவிட்டு புறப்பட்டார் ஸ்டாலின்.