அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன். அதிமுகவில் ராமநாதபுரம் அல்லது சிவகங்கை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தார் கண்ணப்பன். ஆனால், வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் கடும் அப் செட்டானார். இந்த தகவல், தூத்துக்குடி மா.செ.க்களில் ஒருவரான அனிதா ராதாகிருஷ்ணனுக்கு தெரியவர, கண்ணப்பனை தொடர்புகொண்டு பேசியதுடன் இதனை கனிமொழியின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.
இதனையடுத்து, தனது நம்பிக்கைக்குரிய நபரை ராஜ கண்ணப்பனின் வீட்டுக்கு அனுப்பினார் கனிமொழி. அந்த நபர் மூலம் கண்ணப்பனிடம் பேசிய கனிமொழி, " திமுகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். உங்களுக்குரிய மரியாதைக்கு நான் உத்தரவாதம் தருகிறேன் " என்கிற ரீதியில் கிட்டத்தட்ட அரைமணி நேரம் விவாதித்தார் கனிமொழி. அதன் பிறகு திமுகவை ஆதரிக்கும் முடிவை எடுப்பதாக தெரிவித்தார் கண்ணப்பன்.
இதனைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தொடர்புகொண்டு பேசினார் கனிமொழி. அவரும் கண்ணப்பனை சந்திக்க நேரம் ஒதுக்கினார். உடனே இந்த தகவல் கண்ணப்பனுக்கு தெரிவிக்கப்பட்டதும், அதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்த அவர், மாலை 6 மணிக்கு அறிவாலயம் சென்று ஸ்டாலினை சந்தித்து திமுகவிற்கான ஆதரவை தந்தார். ஆதரவளித்துவிட்டு வெளியே வந்ததும், அதிமுக தலைவர்களை கடுமையாகத் தாக்கிப் பேசினார் கண்ணப்பன்.