Skip to main content

கூட்டுறவு வங்கிகளில் தொடர்ந்து நகைக்கடன் வழங்க வேண்டும்! -கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்!

Published on 14/07/2020 | Edited on 14/07/2020
 loan

 

 

கூட்டுறவு வங்கிகளில் குறைந்த வட்டியில் தொடர்ந்து நகைக்கடன் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

 

இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளின் மூலம் வழங்கப்பட்டு வரும் அனைத்து வகையான நகைக்கடன்களும் இன்று (14.7.2020) காலை முதல் முன்னறிவிப்பு ஏதுமின்றி வாய்மொழி உத்தரவு மூலம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. 

 

கரோனா காலத்தில் விவசாயிகள், வியாபாரிகள், சிறு தொழில் நடத்துவோர் உள்ளிட்ட அனைத்து ஏழை, நடுத்தர மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நிலையில், நகைக்கடன்கள் மூலம் ஓரளவு தங்கள் தேவைகளை நிறைவேற்றி வருகின்றனர். இதையும் பறிக்கும் வகையில் தற்போது நகைக்கடன்கள் நிறுத்தப்பட்டுள்ளது. 

 

இது சாதாரண ஏழை, நடுத்தர மக்களுடைய நெருக்கடியை மேலும் பல மடங்கு அதிகரிக்கும் என சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இதனால் தனியார் வட்டி கடைகள் மற்றும் கந்துவட்டி பேர்வழிகளிடம் இவர்கள் அனைவரும் சிக்கி தவிக்கும் நிலை உருவாகும். 

 

எனவே, தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி வழங்குவது போல 6 சதமான வட்டியில் நகைக்கடன்களை கூட்டுறவு வங்கிகளில் தமிழக அரசு தொடர்ந்து வழங்கிட வேண்டும். மேலும், சிறு-குறு மற்றும் நடுத்தர விவசாயிகள், சிறு தொழில் செய்வோர், வியாபாரிகள் உள்ளிட்டோர் ஏற்கனவே நகைக் கடன் பெற்று அதை திருப்பி செலுத்த முடியாமல் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். கரோனா காலத்தில் வட்டி பல மடங்கு உயர்ந்து கொண்டே உள்ளது.

 

ஆகவே, சிறு-குறு மற்றும் நடுத்தர விவசாயிகள், சிறு வியாபாரிகள், சாதாரண ஏழை, எளிய மக்கள் வைத்திருக்கிற நகைக்கடன்களை தள்ளுபடி செய்து, அவர்களது நகையை திருப்பி கொடுக்க வேண்டுமென்ற கோரிக்கையையும் தமிழக அரசு நிறைவேற்றித் தருமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்” என கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்