காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், இன்று தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு வருகை தந்த காங்கிரஸ் கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து வந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்நிலையில், கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் இன்று சட்டமன்றத்திற்கு எதேச்சையாக கருப்பு புடவை அணிந்து வந்துள்ளார். அவர் வரும்போது, விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணியும் கருப்பு புடவை அணிந்து கொண்டு சட்டமன்றத்தில் நின்றிருந்தார். வானதி சீனிவாசனுக்கு சட்டமன்றம் வந்த பிறகே காங்கிரஸின் போராட்டம் குறித்து தெரியவந்துள்ளது.
அவர் விஜயதாரணியை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். விஜயதாரணி எம்.எல்.ஏ.வும் விளையாட்டாய் வானதி சீனிவாசனை பார்த்து “என்ன மேடம் நீங்களும் ஆதரவா” என்று கேட்க, இன்னும் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்த வானதி சீனிவாசன், “நான் அதுக்காகலாம் வரலங்க..” என்று பதில் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார்.
சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு இது குறித்து கேட்கும் பொழுது, “காங்கிரஸ்காரர்கள் தான் ஒரே உடையில் வந்துள்ளார்கள், நீங்களும் அதே யூனிஃபார்மில் வந்துள்ளது போல் தெரிகிறது எனக்கு” என்றார்.
இதற்கு பதில் அளித்த வானதி சீனிவாசன், “தமிழகத்தில் எமெர்ஜென்சியின் போது எப்படியெல்லாம் ஆளும் கட்சியின் தலைவர்கள் சிரமப்பட்டார்கள் என்பதை நினைவூட்டுவதற்கு நான் கருப்பு உடையில் வந்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.