திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. கூட்டனியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் நெல்லை முகமது முபாரக் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக அ.தி.மு.க. பொருளாளரும் முன்னாள் வனத்துறை அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் - முன்னாள் அமைச்சரும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருமான நத்தம் விசுவநாதன் ஆகியோர் தலைமையில் பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது திண்டுக்கல் மாமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராஜ்மோகன். திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் ராஜசேகர்.ஜெ பேரவை செயலாளர் பாரதி முருகன் மற்றும் பகுதி செயலாளர் முன்னிலையில் திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் உள்ள பல வார்டுகளில் தீவிரமாக பிரச்சாரம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தனர். அப்போது பொதுமக்கள் வேட்பாளருக்கு கும்ப மரியாதை எடுத்தும், ஆராத்தி எடுத்தும் வரவேற்றனர்.
இந்த தேர்தல் பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பேசும் போது, “வரலாறு காணாத ஊழலை மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு செய்துள்ளது. தேர்தல் பத்திரம் மூலம் பா.ஜ.க.வின் ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இனியும் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சை தமிழக மக்கள் நம்ப தயாராக இல்லை. திண்டுக்கல் தொகுதி வேட்பாளர் முகமது முபாரக்கை அமோக வெற்றிப்பெற செய்வதன் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு நமது நன்றிக் கடனை செலுத்துவோம் என்று கூறினார்.
அதை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேசும் போது, “மகளிர் உரிமைத்தொகையை முறையாக கொடுக்காததால் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க. ஆட்சியில் விலைவாசி உயர்ந்து விட்டது” என்றார். அவரை அடுத்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர் முகமது முபாரக் பேசும் போது, “திண்டுக்கல் தொகுதியில் என்ன வளம் இல்லை. பூட்டுத் தொழில் உள்ளது சுற்றுலாத்தலமான கொடைக்கானல் உள்ளது. வழிபாட்டுத்தலமான பழனி உள்ளது. கைத்தொழிலுக்கு நெசவும், சுங்குடி தொழிலும் உள்ளது. புகழ் பெற்ற சிறுமலை வாழை, பலா உட்பட பல்வேறு தொழில்கள் உள்ளது என்னை வெற்றிபெற வைத்தால் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியை தொழில் மிகுந்த நகரமாக மாற்றுவேன்” என்று கூறினார்